வரலாறு காணாத மழை… களத்தில் முதல்வர்..!
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு சென்னை உட்பட 12 கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பருவ மழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே கடந்த 7 ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் 23செ.மீ மழை பெய்த நிலையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகள் அதிக பாதிப்புகளை சந்தித்தது.
இந்நிலையில் பருவ மழை தொடர்வதால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் மற்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்டீவன்சன் சாலையில் நடைபெற்றுவரும் பால வேலைகளை பார்வையிட்ட முதலமைச்சர், பெரவலூர் காவல் நிலையம் அருகில் குளம் போல் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சென்னை உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்த நிலையில் 70 இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது நான்காவது முறை என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கடந்த 200 வருடங்களில் நான்காவது முறையாக சென்னையில் 1000மி.மீ மழை பதிவாகியுள்ளது. நவம்பர் மாதத்தில் 3வது முறையாக 1000 மி.மீ மழை பதிவாகி உள்ளது.1918ம் ஆண்டு நவம்பரில் 1088 மிமீ பெய்துள்ளது, 2005ம் ஆண்டு அக்டோபரில் 1078 மி.மீ பெய்துள்ளது. 2015ம் ஆண்டு நவம்பரில் 1049 மி.மீ மழை பெய்துள்ளது. 2021 நவம்பரில் தற்போது வரை 1003 மி.மி மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!
மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
–நமது நிருபர்