கோவையில் ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிக்னல்களில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலூன், பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில் பதிவாகும் திருட்டு வழக்குகளில், உண்மையான குற்றவாளிகள் சிக்கவில்லையென்றால், அப்பகுதியில் பொம்மை வியாபாரம் செய்யும் வெளி மாநிலத் தொழிலாளர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்வதாக அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் விசாரணை மேற்பொண்டதில், கடந்த ஆகஸ்டு 27-ல் கோவை குச்சிபட்டி பகுதியைச் சேர்ந்த சையது முகமது காசிம் என்பவர், இரத்தினபுரி சி-4 காவல் நிலையத்தில், தனது வீட்டில் திருட்டு போயுள்ளதாகவும் அதனை கண்டுப்பிடித்து தருமாறும் புகார் அளித்து இருக்கிறார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர், புகாரைப் பெற்றுக் கொண்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளார். இந்த புகாரை விசாரணை மேற்கொண்ட புலனாய்வு பிரிவு, காவல் துறையினர் உண்மையான திருடர்களை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யாமல், போக்குவரத்து சிக்னல்களில் பொம்மை வியாபாரம் செய்து கொண்டிருந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் என்பவரையும், அவரது மனைவி மஞ்சுளாவையும் விசாரணைக்காக என அழைத்துச்சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பதற்காக நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.
போக்குவரத்து சிக்னல்களில் பொம்மை வியாபாரம் செய்து கொண்டிருந்த ராம்லால், மஞ்சுளா தம்பதிகளை காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பதாக, இந்த தம்பதிகளைப் பார்த்ததும் புரிந்து கொண்டு நீதிபதி, அவர்களை விடுவித்துவிட்டதாக கூறுகிறார்கள். சொந்த மாநிலத்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் தான் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்திற்கு வந்து பொம்மை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துவதாகவும், எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், தொல்லைகள் கொடுக்காமல் இருந்தாலே போதும் என்கிறார்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.
தமிழக காவல் துறையினர், புலனாய்வு செய்வதில், ஸ்காட்லாந்து காவலர்களுக்கு இணையாணவர் என பெயரெத்தவர்கள். இனிமேலாவது உண்மையான குற்றவாளிகளை கைது செய்து, உரிய தண்டணை வாங்கித் தர வேண்டும். சாலைகளில் பிழைப்பு நடத்தி, வயிற்றைக் கழுவும் அப்பாவி தொழிலாளர்களை நிம்மதியாக வாழவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் கோயம்புத்தூரில் பணிக்கு வர மறுத்ததாக கூறி, வடமாநில பெண் தொழிலாளியை, தனியார் ஸ்பின்னிங் மில் மேலாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், மேலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் இந்த தனியார் ஸ்பின்னிங் மில்லில் சுமார் 800-க்கும் மேற்பட வடமாநிலத்தவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவரை வேலைக்கு வர மறுத்ததாக கூறி மேலாளர் முத்தையாவும், காப்பாளர் லதாவும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் வைரலாகின.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூன்று, நான்கு நாட்களாக வேலைக்கு வராமல் இருந்ததால், நேரில் சென்று கேட்டதாகவும், அதற்கு அந்த பெண் தாக்கியதால் பதிலுக்கு தாங்களும் தாக்கியதாகவும் ஸ்பின்னிங் மில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துபாபு