சமுதாயத்தை சீரழிக்கும் பார்க் ஓட்டல் பப்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டலின் மதுபான விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளை நுகர்வதற்கு கட்டாயப்படுத்தி போதை கும்பல் தாக்கியதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ள புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் நள்ளிரவு தனது நண்பருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கவுசல்யா என்பவரை அங்கு வந்த பெரோஸ்கான் என்ற நபர் தாக்கியதாக கூறப்படுகின்றது. இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறைக்கு புகார் ஏதும் தெரிவிக்காமல் தி பார்க் ஓட்டல் நிர்வாகம் ரகசியமாக அவர்களை சமரசம் செய்து வெளியேற்றி உள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த கவுசல்யா என்ற பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காவல்துறையினர் கவுசல்யாவிடம் விசாரணை நடத்தி சென்ற நிலையில் பார்க் ஓட்டலில் அரசால் தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹெராயின் போன்ற போதை பொருள் எளிதாக கிடைப்பதாகவும், அந்த போதை பொருட்களை உபயோகிக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மறுத்ததால் போதை பொருள் விற்கும் நபர் தன்னை தாக்கியதாகவும் கவுசல்யா குற்றஞ்சாட்டினார்.
கோவையை பூர்வீகமாக கொண்ட கவுசல்யா, சென்னை வடபழனியில் தங்கி நிகழ்ச்சி மேலாண்மை பணி மேற்கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் பப்புக்கு அடிக்கடி சென்று வந்த கவுசல்யா, பெரம்பூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவருடன் நெருங்கி பழகியதாகவும் அவர் தன்னை போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்க முயன்றதால் அவரை விட்டு விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை தேனாம்பேட்டை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்றும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். பார்க் ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்தும், கவுசல்யாவின் புகார் குறித்தும் பார்க் ஓட்டலின் பாதுகாப்பு அதிகாரி கார்த்திக் அளித்துள்ள விளக்கத்தில், இது முன்னாள் காதலனுக்கும், காதலிக்கும் இடையே உள்ள சாதாரண பிரச்சனை சிலரின் தூண்டுதலின் பேரில் பெரிதாக்கப்படுவதாகவும், இருவரும் சண்டையிட்ட சிசிடிவி காட்சிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
சமுதாய சீரழிவிற்கு காரணகர்த்தாவாக நட்சத்திர ஓட்டலில் காலவரையின்றி செயல்படும் மதுபான விடுதிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பதோடு போதை பொருள் விற்கும் நபர்களை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.