தமிழகம்

களத்தில் இறங்கிய முதல்வர்… ஆச்சரியத்தில் ஆளுநர்..!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டபோது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவரை தமிழக ஆளுநராக நியமித்ததை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டவுடன் முதல் ஆளாக வாழ்த்துக் கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இதற்கு காரணம் ஆளுநருடன் தேவையற்ற மோதல்களை தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் இருந்ததுதான்.

பொதுவாக பாரதிய ஜனதா கட்சி அல்லாத பிராந்திய கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு ஆளுநர்கள் மூலம் நெருக்கடி கொடுப்பது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கம். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆளுநர் ஜெகதீஸ்தங்கார் வெளிப்படையாகவே அரசியல் செய்து வருகிறார். இதுபோன்று ஒரு மோதலை ஸ்டாலின் விரும்பாத காரணத்தினால் தான் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் புதிய ஆளுநர் ரவியை வரவேற்று அறிக்கை வெளியிட்டார். இதேபோல் ஆளுநராக பொறுப்பேற்றதும் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவியிடம் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போல் தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தனது செயல்பாடு இருக்கும் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அதேசமயம் கடந்த கால ஆளுநர்களைக் காட்டிலும் தமிழக அரசின் செயல்பாட்டில் ஆளுநர் ரவியின் தலையீடு அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அடுத்தடுத்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் ஆளுநர் ரவி விளக்கம் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஆளுநர் கேட்கும் தகவல்களை கொடுக்க அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு வெளிப்படையாகவே சுற்றறிக்கை வெளியிட்டார். இது முதலமைச்சர் ஸ்டாலினை சிறிது கோபப்படுத்தியது. இதன்பிறகு முக்கிய அதிகாரிகள் சிலரை தனது ஆளுநர் மாளிகைக்கு அழைத்து துறைரீதியாக விளக்கங்களை ஆளுநர் கேட்டது மறுபடியும் திமுக கூட்டணி கட்சிகளை கோபப்படுத்தியது.ஆளுநர் ஆட்சி அதிகாரத்தில் தலையிட கூடாது என மறுபடியும் வலியுறுத்தல்கள் எழுந்தன. இதேபோல் துணைவேந்தர்களை அழைத்து கூட்டம், காவல்துறை இயக்குனர்களை அழைத்து அறிவுறுத்தல் என நிழல் ஆட்சி போன்றே ஆளுநர் ரவி நடத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் தான் சென்னையில் மழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகின. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சென்னை நகரமே மழையால் வெள்ளக்காடாகி முடங்கிப் போனது. முதல்நாள் இரவு பெய்த மழையால் மறுநாள் சென்னை தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் கருப்பு சிவப்பு சீப்பில் மழைக்கோட்டுடன் களமிறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உணவு வழங்கினார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். வெள்ளம் பாதித்த சென்னையை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். இப்படியாக தற்போது வரை தொடர்ந்து பத்து நாட்களாக காலை முதல் மாலை வரை வெள்ள நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.


முதல்நாளில் காலையில் தொடங்கி மாலை வரை ஒன்பது மணி நேரம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பணிகளை பார்வையிட்டார் ஸ்டாலின். இப்படி முதல்வரின் அனைத்து செயல்களும் தலைமைச் செயலகத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு குறிப்பு எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஸ்டாலின் பணிகளைப் பார்த்து மிரண்டு போனதாக சொல்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற சமயங்களில் கோட்டை அல்லது வீட்டில் அமர்ந்து கொண்டே முதலமைச்சர்கள் உத்தரவு போட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதைத்தான் இதுவரை தான் பார்த்துள்ளதாகவும், ஆனால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தொடர்ந்து ஒருவார காலமாகச் சென்று பணிகளை விரைவு படுத்திய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


ஆளுநர் ஆர்.என.ரவி தெரிவித்த இந்த பாராட்டுக்கள் தற்போது தலைமைச் செயலகம் வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button