சமவேலைக்கு சம ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
பள்ளிக் கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ஆம் தேதி முதல் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் மேற்கொண்டனர். நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியவர்களில் 200 பேர் மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசுத் தரப்புடன் இதற்கு முன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை அன்று இடைநிலை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றால், எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் உறுதிமொழி அளிக்க வேண்டும் இடை நிலை ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஊதிய முரண்பாடுகளை களைய அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை பெறப்பட்ட பின்புதான் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்த முடிவு தெரியவரும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மேல் நடவடிக்கை எடுக்கும் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வசதியாக காவல்துறையினர் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர்.