கனஜோராக நடக்கும் செம்மண் கடத்தல்.. : பாழாகும் விவசாய நிலங்கள்…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் தோண்டி எடுத்துச் செல்கிறார்கள். சவுடு மணல் எடுப்பதாக விவசாய நிலங்களில் செம்மண்ணை தோண்டி எடுத்து நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் மேடான பகுதிகளை தோண்டி பள்ளங்களில் மணலை கொட்டி சமப்படுத்துவதாக அரசிடம் அனுமதியைப் பெற்று செம்மண்ணை சில மணல் மாபியாக்கள் கடத்தி வருகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகிறார்கள். இது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
விவசாய நிலங்களில் மண்ணை தோண்டி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டத்தில் ஜோத்தம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகே இரவு பகலாக முப்பதுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் செம்மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து கடத்திச் செல்கிறார்கள். இந்த இடத்தைச் சுற்றிலும் தென்னை, வாழை தோப்புகள் உள்ளது. கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுப்பதால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.
பட்டப்பகலில் வெளிப்படையாக முப்பதுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் செம்மண்ணை தோண்டி எடுத்து நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு பயன்படுத்தி வருவது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தெரிந்தும் தெரியாதது போல்தான் இருக்கிறார்கள். இந்த மணல் திருட்டு ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு தான் நடைபெறுகிறது என்கிறார்கள் அப்பகுதியினர். திருப்பூர் மாவட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் என இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு அமைச்சர்களும் தலையிட்டு விவசாய நிலங்களில் சவுடு மணல் அனுமதி பெற்று செம்மண்ணை தோண்டி எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு சிலரின் சுயநலத்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை இன்னும் தொடர்வதாகவே பொதுமக்கள் புலம்புகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசியல் செல்வாக்காலும் பணபலத்தாலும் கனிம வளங்களை கொள்ளை அடித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இதை அப்போதைய எதிர்கட்சித்தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே மாவட்டம் தோறும் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசியிருக்கிறார். கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த தவறால்தான் இன்று ஆட்சியை இழந்திருக்கிறார்கள்.
இன்றைய முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து தான் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். இன்று எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்து வரும் முதல்வர், விவசாயிகளின் அடிப்படை ஆதாரமான நிலத்தடி நீரை சுரண்டும் கனிம வள கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– கார்வேந்த பிரபு