நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறதா?
நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சீரஞ்சீவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நெகிழி பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 2019 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாளடைவில் சட்டத்திற்கு புறம்பாக நெகிழியை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில், பனை ஓலை உள்ளிட்ட இயற்கை பொருட்கள் நலிவடைய தொடங்கியுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனவே நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் சீரஞ்சீவி கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு, இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.