தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ரெய்டு..! சிக்கும் அதிகாரிகள்…

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டில் இறங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

வேலூர் மாவட்டத்தில், காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டை – ஆந்திர எல்லையில் செயல்பட்டு வரும் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடி, அங்குப் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் வீடு, திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூர் ஆகிய இடங்களிலுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. மேற்கண்ட இந்த இடங்களில், ஒரே நாளில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத 14,18,110 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

வேலூர், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளே அனுமதிக்க அங்கு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுவதாகப் புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அங்கு வலை விரித்தது. அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி என்பவர் பணியில் இருந்தார். அவரது அலுவலகத்தில் இருந்து 1,38,900 ரூபாய் பணம் சிக்கியது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தியை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அங்கு சொத்து தொடர்பாக இருந்த 6 ஆவணங்களையும், ரூ.4.45 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். கணக்கில் வராத இந்த தொகைக் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் மாலை 4 மணிக்கு உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், இரவு 8 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் அங்கு இருந்த ஒருவரிடம் இருந்து 72,500 ரூபாயைக் கைப்பற்றினர்.

ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அலுவலகத்திலுள்ள சுவாமி படங்களின் பின்புறம், ஜன்னல்களின் இடுக்குகள், டிபன்பாக்ஸ், அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. சந்தேகப்பட்டு கழிவறை மற்றும் பவர் ரூமில் தேடியபோது 53,510 ரூபாய் ரொக்கப்பணமாக சிக்கியது. ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவலறிந்ததும் கழிவறையில் பணத்தை பதுக்கியதாகத் தெரியவந்திருக்கிறது. அதே சமயம், அலுவலக நுழைவு வாயில் கதவைப் பூட்டி ரெய்டில் ஈடுபட்டதால், சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத 4 பேரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இடைத்தரகர்கள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்தும் 51,700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, ஒரு இளம் ஜோடியும் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் இருந்தனர். யார் அவர்கள்? என விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்த இளம்பெண், அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரிந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு, தங்களின் திருமணத்தை பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் வெளியே காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், இளம் ஜோடியின் பெற்றோர்களை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து, திருமணத்தையும் பதிவு செய்ய வைத்து தம்பதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பரபரப்பான ரெய்டுக்கு இடையே, இந்தத் திருமண பதிவு சில நிமிடங்கள் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தின.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டுக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்குப் பத்திரங்கள் பதிவுச் செய்ய வந்திருந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 98,900 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தண்டராம்பட்டு சார்பதிவாளர் கதிரேசனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பிடிபட்டிருக்கிறது. கணக்கில் காட்டப்படாத இந்தத் தொகை குறித்து தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் (பொறுப்பு) சீனிவாசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேபோல, தருமபுரி மாவட்டம், அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3,57,600 ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியிருக்கிறது. இந்த அலுவலகத்தை கடந்த 3 நாள்களாக நோட்டமிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலங்களில் அதிகாரிகள் காட்டில் பணமழைக் கொட்டுவதும், அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருள்கள் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டன. மற்ற துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் கடைகளை குறி வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அந்த பொறியில் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வித்தியாசமாக டீல்’ செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சில நாள்களுக்கு முன்பு கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்ட மேலாளர் செந்தில்குமார், ``தீபாவளி நேரம் பாஸ். டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டாம். கண்டுக்காதீங்க. ரூ.25,000 கொடுத்தனுப்பறேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், அந்தடீல்’ குறித்து தன்னுடைய மேலதிகாரிக்குத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், சேத்தியாத்தோப்புக்கு அருகில் இருக்கும் சென்னிநத்தம் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் அறிவுரை?!’ வழங்கிய செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு,சேத்தியாத்தோப்புக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு சரியென்று கூறிய இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், சேத்தியாதோப்புக்குச் சென்று செந்தில்குமாருக்கு போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அதையடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், ரூ.25,000 கொடுத்தனுப்பியிருக்கிறார் செந்தில்குமார். அப்போது அவர்களுக்காகவே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான போலீஸார், செந்தில்குமாரையும், ராதாகிருஷ்ணனையும் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். அப்போதுகூட, `பணம் பத்தவில்லை என்றால் கூடுதலாக தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று பேரம் பேசினார்களாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button