தமிழகம்

கொடைக்கானல் மலை பூண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை!

புவிசார் குறியீடு பெற்ற ‘ஒரு பூண்டை’ விதைத்தும் லாபம் பெறாமல், கடும் நெருக்கடியில் சுழல்கிறார்கள் விவசாயிகள். மருத்துவ குணமும், தேவையும் அதிகம் இருக்கும் இந்த பூண்டு விவசாயிகளின் சிரமங்கள் பற்றிக் கேட்கையில், இன்றைய விவசாயம் என்பது தன்னலமற்ற தொண்டு நிறுவனங்களின் சேவையைப் போன்று மாறி வருகிறது, என்று நினைக்கத் தோன்றுகிறது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2100 கிமீ உயரத்தில் பழனி மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பாதையில் பயணிப்பது என்பது நாட்டின் மிக அழகான பாதையாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு வளைவில் முன்னேறும் போதும், விவசாயிகள் கேரட், முட்டைக்கோஸ், பூண்டு, உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயிரிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

மலை பூண்டு பெரும்பாலும் கவுஞ்சி, பூண்டி, மன்னவனூர், பூம்பரை, கூக்கல், வில்பட்டி போன்ற கிராமங்களில் வளர்க்கப்படுகிறது. பூம்பரை கிராமத்தில் முக்கிய சந்தையிலிருந்து சில மீட்டர் தொலைவில் சில பூண்டு விவசாயிகளை சந்தித்தோம்.நான் அவர்களைச் சந்தித்ததும், என்னைப் புன்னகையுடன் வரவேற்றதுடன், அவர்களின் விவசாயம் பற்றி விவரித்தனர்.

“சில மாதங்களுக்கு முன் நாங்கள் விதைத்த பூண்டைத்தான் தற்போது அறுவடை செய்கிறோம்” என்று மலைச்சரிவில் இருக்கும் தனது வயலை பார்த்து விவசாயி குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு இருமுறை பயிரிடப்படும் மலை பூண்டுக்கு, மே முதல் ஜூலை வரையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையும் முக்கிய காலமாக இருக்கிறது. கொடைக்கானலில் இரண்டு வகையான பூண்டுகள் பயிரிடப்படுகிறது. இதில் ‘ஒரு பூண்டு’ சிங்கப்பூர் ரகம் எனவும், ‘பல் பூண்டு’ மேட்டுப்பாளையம் ரகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

“பல் பூண்டு விதையைச் சந்தையிலிருந்து வாங்கி விதைக்கிறோம். அதுவே ஒரு பூண்டு, விதைகளைப் பல பல்களாக உடைத்து விதைக்கிறோம் என்றார் விவசாயி.

“பல் பூண்டை விட, ஒரு பூண்டிற்கான மதிப்பு மிக அதிகம். ஒரு பூண்டில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும், அல்லிப் ப்ரோபில் சல்பைடு இருப்பதால், அதன் தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார் திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கே.சீனிவாசன்.

ஒரு பூண்டின் மருத்துவ குணத்தாலும், அதன் பூர்வீகம் கொடைக்கானல் என்பதாலும், புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த பூண்டு கொடைக்கானலுக்கு மட்டும் தனித்துவமான விவசாய பொருளாக அமைகிறது. ஒரு பூண்டு உலர வைத்து 4 மாதங்கள் வரை சேமிக்கலாம். அதுவே பல் பூண்டை வெறும் 15 நாட்கள் மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

தோட்டக்கலைத்துறையின் தகவல்படி, 1:4 என்ற விகிதத்தில் பூண்டின் விதை விளைச்சல் கொடுக்கிறது. அதாவது ஒரு கிலோ பூண்டு விதை பயிரிடப்பட்டால், 3லிருந்து 5 கிலோ வரை உற்பத்தியாகும். கொடைக்கானல் விவசாயிகள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் விற்க தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெள்ளைப் பூண்டு சந்தை பெரியகுளம் வடுகப்பட்டியில் உள்ளது.

மேலும் விவசாயிகள் கூறுகையில் “ஒரு விவசாயி 100 கிலோ பூண்டு விதைகளைக் கிலோ ஒன்றுக்கு 240 வீதம், 24,000 ரூபாய்க்கு வாங்குகிறார். அது பயிரிட்டு அறுவடை செய்து விவசாயிகள் விற்கையில், அவர்களுக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதம் மட்டுமே கிடைக்கிறது. அப்படி இருந்தால், 100 கிலோ பயிரிடும் விவசாயிக்கு 300 கிலோ கிடைத்தால், அவர் விவசாயத்திற்குச் செலவு செய்த தொகை மட்டுமே விற்கும் போது கிடைக்கிறது” என்றார்.

இதுபோன்ற சூழலில் வடுகப்பட்டி சந்தையில் விவசாயிகளும், வியாபாரிகளும் கடன் சுழற்சியில் தத்தளிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் வியாபாரிகளிடம் வாங்கும் கடனுக்கு, வியாபாரிகள் தரப்பில் விளைபொருட்களிலிருந்து கடன் தொகையைக் கழிக்கின்றனர். சில நேரங்களில் விவசாயிகளுக்குக் கடனுக்கு ஈடான மதிப்பு விளைபொருளில் கிடைக்காமல் போகிறது. எனவே பல லட்சம் ரூபாய் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுகிறது.

“கடந்த ஆண்டு வட இந்தியாவில் கடும் மழை பொழிவு ஏற்பட்டதால், அங்குள்ள பயிர்கள் அனைத்தும் பாதிப்பைச் சந்தித்தன. எனவே இங்குள்ள வியாபாரிகளால், வட இந்தியாவின் பூண்டு தேவையை ஓரளவு நிவிர்த்தி செய்ய முடிந்தது.

“பூண்டின் தரம், அதன் விலையை நிர்ணயம் செய்யும்” என்கிறார்கள் விற்பனையாளர்கள். பூண்டை அளவு மற்றும் தரத்தைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கின்றனர். குறைந்த ரகத்தில் பெருவட்டு, நடப்பு மற்றும் பொடி ஆகிய தரங்களாகக் குறிப்பிடப்படுகிறது. பெருவட்டு நல்ல பூண்டாக எடுத்துக்கொள்கின்றனர். இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நடப்பு மற்றும் பொடி தரம் குறைந்த பூண்டாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதன் அதிகபட்ச விலை என்பது ரூ.50. வியாபாரிகள் பெரும்பாலும் விதைகளுக்கு இருமடங்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது. அரசு விதை வழங்காததால், வியாபாரிகளிடம் இருந்து விதையை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் கேட்பதற்கு இணங்க, வடுகப்பட்டியைச் சேர்ந்த வியாபாரிகள், மேட்டுப்பாளையத்திலிருந்து பூண்டு விதைகளை ஆர்டர் செய்கிறார்கள். எங்களிடம் பேசிய வர்த்தகர், “நாங்கள் விவசாயிகள் கேட்பதைப் பொறுத்து கடன் பெற்று, விதைகளை வாங்கி கொடுக்கிறோம். அவர்கள் நஷ்டத்தைச் சந்தித்தால் அது எங்களையும் பாதிக்கும். மூன்று வருடங்களுக்கு முன் விதைகள் கிலோவிற்கு 40 முதல் 70 ரூபாய் அளவு விற்கப்பட்டு வந்தது. தற்போது கிலோவிற்கு ரூ 140க்கு விற்கப்படுகிறது ” என்றார்.

“பூண்டு ஆண்டில் இருமுறை விதைக்கப்படும் கார வகையைச் சேர்ந்த பயிர். ஆயிரம் ஏக்கருக்கு விதைகளை வாங்கி விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை தயாராக இல்லை. தற்போதைக்கு நாங்கள் பூண்டு சாகுபடிக்கு மானியம் வழங்குகிறோம்” விவசாயிகளுக்கு விதை வழங்குவதில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் என்று தோட்டக்கலை துறை இயக்குனர் கூறினார். தேசிய தோட்டக்கலைத் துறை சார்பாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் பூண்டு சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் விவசாயிகள், 3 ஆயிரம் ஏக்கரில் பூண்டு பயிரிட்டு வருகின்றனர். தற்போது ஆண்டுக்கு 6500 டன் பூண்டு அறுவடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூண்டு பயிரிடும் அளவு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது.

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தபின், கொடைக்கானல் தோட்டக்கலை, மாநில விவசாய சந்தைப்படுத்தல் துறை மூலம் பூண்டு உலர வைத்து, சேமிப்பதற்கான கிடங்கு கட்டப்பட்டுள்ளது. “கிடங்கு, புகையிட்டு உலர்த்துதல் மற்றும் 1000 டன் கொள்ளளவு கொண்ட பூண்டை சேமிக்கும் வசதியும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டன் எடையுள்ள பூண்டுகள் வரை உலர்த்தலாம்” என்கிறார் தோட்டக்கலை துறை இயக்குனர்.

தற்போது விவசாயிகள் தங்களின் நிலத்தின் மதிப்பை உணர்ந்துள்ளனர். இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான நில தகராறுகள் உள்ளன. அவ்வாறு இருக்கும் நிலங்களுக்கு மானியம் மற்றும் நிவாரணங்கள் பெற முடியாமல் போகிறது. தகுதியானவர்களின் நிலப்பிரச்சனையை தீர்த்து வைக்க அரசாங்கம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

“விவசாயிகள் மோசமான விளைச்சலை எதிர் கொண்டால், அது எங்களையும் நேரடியாகப் பதிக்கிறது” என்கிறார் வடுகப்பட்டி வியாபாரி. “நாங்கள் விவசாயிகள் கொடுக்கும் அனைத்து பூண்டையும் சரிபார்க்க முடியாது. சில வேளைகளில் அழுகிய பூண்டையும் அவர்கள் கலந்துவிடலாம். பூண்டில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருத்து பயன்படுத்துவது, பிசுபிப்பான தன்மையையும், பஞ்சுபோன்று மாற்றச் செய்யும். இது சரியான சுவை கொடுக்காது” என்று தங்களின் சிரமத்தைக் குறிப்பிடுகிறார்.

“இயற்கை விவசாயம் இதற்கு ஒரே தீர்வு” மலை பூண்டு கூட்டு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற போராடி வருகின்றனர். “தற்போது பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இயற்கை விவசாயத்தில் வருமானம் ஈட்ட முடியும். மண் இரசாயன நிலையிலிருந்து இயற்கையான நிலைக்கு மாற 4லிருந்து 5 வருடங்கள் தேவைப்படும். முற்றிலும் விவசாயம் மாற்றம் அடையக் குறுகிய காலம் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்”

“விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சி செய்கிறார்கள். ஒரு விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தால், ஒரு ஏக்கர் இயற்கை விவசாயத்தையும், மற்றொரு ஏக்கரில் சாதாரண விவசாயத்தையும் செய்கிறார்கள். 3லிருந்து 4 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்புகிறது. அனைத்து விவசாயமும் இயற்கை முறையில் மாறவில்லை என்றாலும் பாதி அளவிலாவது இயற்கை விவசாயத்திற்கு மாற்றப்பட்டிருக்கும்” மகசூல் குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணியாக இருப்பது காலநிலை மாற்றம். உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவை எதிர்கொள்கின்றனர். இதில் கொடைக்கானல் பூண்டு விவசாயிகளும் விதிவிலக்கல்ல.

“கொடைக்கானலில் சராசரியாக 1600 மிமீ மழை பொழிவு இருக்கும். காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிய மழை அதிகரித்துள்ளது. இதுபோன்ற எதிர்பாராத மழையால் பயிர்கள் அதிகமாகப் பாதிப்படைய செய்கின்றன. குறிப்பாகப் பூண்டு குளிர்காலப் பயிர் என்பதால், மழையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போகிறது” வெள்ளைப் பூண்டு வியாபாரத்தில் பிழைப்பவர்கள் பிழைக்கலாம்” என்கிறார் வடுகப்பட்டி வியாபாரி.

மேலும் விவசாயிகள் கூறுகையில், “எல்லாம் நன்றாக மாறுமா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்குத் தெரிந்த ஒரே வேலை இதுதான். நாங்கள் எப்போதுமே விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோம்” என்று குறிப்பிட்டவாறு, அனைத்து நெருக்கடியிலும் பழகிக்கொண்டுள்ளோம் என்பதை ஆழமாக முன்வைத்தார்.

A.முகமது ஆரிப்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button