யானைப்பசிக்கு சோளப்பொறியா?
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. வளர்ந்துவரும் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக யூரியா உரம் தேவை உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் முழுவதும் கடும் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தாண்டில் சுமார் நாலரை லட்சம் ஏக்கரில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, குதிரை வாலி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டுள்ளனர். அவற்றுக்கு நாலரை லட்சம் மூட்டையூரியா தேவைப்படும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பெருமளவு உரம் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் 162 டன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும், 638 டன் தனியார் உரக்கடைகளுக்கும் விடுவித்துள்ளது.
இதனால் யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் தெருக்கடைகளில் காத்துக்கிடக்கின்றனர்.
நாலரை லட்சம் மூட்டை தேவைப்படும் நிலையில் நாலாயிரத்து ஐநூறு மூட்டை மட்டுமே விடுவித்துள்ளது யானைப் பசிக்கு சோளப்பொறியை கொடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஸ்பிக் யூரியாவை முழுமையாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.