திருப்பூரில் துணிக்கடைக்கு தனிப்படை பாதுகாப்பா?
திருப்பூர் மாநகராட்சியின் பிரதான சாலையான குமரன் சாலையில் குறிப்பிட்ட ஒரு துணிக்கடை அமைந்துள்ள பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக்கிடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருப்பூர் குமரன் சாலை ரயில் நிலையம் மற்றும் ஈரோடு, சேலம், சென்னை மற்றும் அவினாசி போன்ற ஊர்களில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் செல்ல பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில் குமரன் சாலையும் கோர்ட் வீதியும் சந்திக்கும் நெருக்கடியான இடத்தில் பிரபல துணிக்கடை அமைந்துள்ளது. சாலையை ஒட்டியே அமைந்துள்ள இந்த துணிக்கடைக்கு போதிய வாகன நிறுத்த வசதி இல்லாததால் ஒரு முறை இந்த துணிக்கடைக்கு சீல் வைத்தனர். ஆனால் தற்போது கொரானா தொற்று காரணமாக திருப்பூரின் தொழில் முற்றிலும் நெருக்கடியை சந்தித்து மீண்டெழும் வேளையில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்களை கடைக்குள் அனுமதிக்கின்றனர்.
மேலும் சாலையை ஒட்டியே இந்த கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிக கூட்டம் கூடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனால் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட வடக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவது போல் காட்சி அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற பிரதான சாலையில் அனுமதி வழங்குவதற்கு முன்பாக இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியாதா? யாரோ ஒருவர் லாபம் சம்பாதிக்க கடமை உணர்ச்சியுடன் குற்றத்தடுப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரை இது போன்று துணிக்கடைக்கு பாதுகாப்பு அளிக்க செய்வது எந்த விதத்தில் நியாயம்? ஏன் தனியார் நிறுவன செக்யூரிட்டி ஆட்களை அதிக அளவில் நியமித்து பொதுமக்களை கட்டுப்படுத்தலாம் என்பதே பொதுமக்களின் கருத்து.
மேலும் எதிர்காலத்தில் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த பணிகள் துரித கதியில் நடைபெற்றுவரும் நிலையில் இது போன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் இல்லாதவாறு கடைகளுக்குஅனுமதி வழங்க அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.