தமிழகம்

தொடரும் இரிடியம் மோசடி…

சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரிடமிருந்து இரிடியம் ஆசைகாட்டி, 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
மஞ்சள் கலந்த வெண்மை நிறமும், 4471 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே உருகும் தன்மையும் கொண்ட இரிடியம், பூமியில் கிடைக்கும் மிக அரிய உலோகங்களில் ஒன்று. மிக அரிதாகவும், உயர்ந்த தொழில் நுட்பங்களுக்கு மட்டுமே பயன்படும் இரிடியத்தை வைத்து மோசடி செய்வது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் காட்டுவதை போலவே பல கும்பல்கள், மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போதிலும், இன்னமும் இரிடியம் மோசடி நடைபெற்ற வண்ணமே உள்ளது. இதற்கு சேலத்தில் நடைபெற்ற சம்பவம் மற்றொரு உதாரணமாகி உள்ளது.

சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரான பிரவீண்குமாரை, சில நாட்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த சிலர் அணுகினர். தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், இதனை விற்றால் பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் ஆசை காட்டினார்.

கோடிகளில் புரளலாம் என்ற ஆசையால் பிரவீண்குமார் அந்த கும்பலுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அப்போது அந்த கும்பல்,கனத்த,கருப்பு பெட்டியை பிரவீண் குமாரிடம் கொடுத்தது. அந்த பெட்டியில் இரிடியம் இருப்பதாகவும், அதற்கு உரிய பணம் தருமாறும் கேட்டது. ஆனால் இரிடியத்தை கண்ணால் பார்த்த பின்னர் தான் பணம் தர முடியுமென பிரவீண்குமார் கூற, அந்த கும்பல், இரும்பு பெட்டியில் இருக்கும் இரிடியத்தை பார்க்க விசேச உடை வேண்டும் என்றும், அந்த உடை இல்லாமல் பெட்டியை திறந்தால் உயிருக்கு ஆபத்து என்றும் பயம் காட்டியது. இதனால் கொஞ்சம் தயங்கிய பிரவீண் குமார், இரிடியத்தை பார்க்க உதவும் விசேச உடை வேண்டும் என்று கேட்டார்.

அந்த உடை மும்பையில் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன் விலை 55 லட்ச ரூபாய் என்றும் கூறிய அந்த கும்பல், பிரவீண் குமாரிடம், பணம் கேட்டது. மும்பை சென்று உடையை வாங்கி வருவதாகவும், அதுவரை கறுப்பு பெட்டியை பிரவீண் குமாரே வைத்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி அந்த கும்பலுக்கு பிரவீண் குமார் 55 லட்ச ரூபாய் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், அந்த கும்பல், பிரவீண் குமார் கண்ணிலேயே தென்படவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும், சரியான பதிலை சொல்லவும் இல்லை. இதன் பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரவீண்குமார், சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரை சந்தித்து 55 லட்ச ரூபாய் மோசடி குறித்து புகார் செய்தார் .


காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார் சென்னையைச் சேர்ந்த தினேஷ் குமார், சிவக்குமார், சேலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அன்காம் பாத்ரா ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களை தவிர மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே மோசடி கும்பல் கொடுத்த கறுப்பு பெட்டியை தனிப்படை போலீசார் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்த்தனர். அப்போது அந்த கருப்பு பெட்டிக்குள் முழுவதும் பஞ்சு வைத்து அதில் ரசாயனம் கொட்டப்பட்டு இருந்தது.
பிடிபட்டுள்ள நான்கு பேரிடம் காவல்துறை உயரதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த கும்பலின் பின்னணி என்ன? இவர்கள் வேறு யாரையாவது இது போல ஏமாற்றி உள்ளனரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரிடியம் உலோகம் சர்வதேச அளவில் ஆண்டு ஒன்றுக்கு வெறும் மூன்று டன் என்ற அளவில் தான் பிரித்து எடுக்கப்படுகிறது. மிக பல ஆண்டுகள் பழமையான தாமிரத்தில் இரிடியம் கலந்து இருக்கும். சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கும் உலோக கலவையை 361 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உருக்கினால் தாமிரம் பிரிந்து வரும், மிச்சம் இருக்கும் உலோகத்தை 2645 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உருக்கினால் நிக்கல் பிரியும், இதன் பின்னர் அந்த உலோகத்தில் இரிடியம் மட்டுமே மிச்சமிருக்கும்.

இப்படி மிக அரிதான இரிடியம் தயாரிக்கும் பணி மூலம் கிடைக்கும் ஒரு கிலோ இரிடியம் 50 லட்ச ரூபாய் விலைக்கு விற்பனையாகும். விண்வெளி கலங்கள், விமான பாகங்கள் என ஒரு சில உபயோகத்திற்கு மட்டுமே பயன்படும் இரிடியத்தை அரசு நிர்வாகம் தவிர தனி மனிதர்கள் வாங்க முடியாது என்பதே உண்மை.
இதைதவிர அந்த உலோகத்திற்கு வேறு எந்த சிறப்பு தன்மையோ, மந்திரம் சொல்லி, உருவேற்றிய பின்னர் பணமழை கொட்ட வைக்கும் சக்தியோ கிடையவே கிடையாது என்பதே அறிவியல் பூர்வமான உண்மை. மனித வாழ்க்கையை உழைப்பும், உண்மையும், நேர்மையும் மட்டுமே உயர்வுக்கு கொண்டு செல்லுமே தவிர, ஒரு உலோகம் ஒரு போதும் கொண்டு போகாது என்பதை உணர்ந்து கொண்டால் இது போன்ற மோசடிகளுக்கு இடமே இல்லாமல் போகும்.

– செந்தில்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button