ஈரானில் கொரோனா ஊரடங்கு உத்தரவு : சிக்கித் தவிக்கும் 22 தமிழக மீனவர்கள்… : மீட்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாலைக்குடி முள்ளிமுனை காரங்காடு உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் குடும்பத்தை காப்பாற்றவும் ஈரான் நாட்டிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில் கொரனோ ஊரடங்கு உத்தரவால் ஈரானில் நிலைமை மோசமடைந்தது. இதனால் ஈரான் பகுதியிலிருந்து வெளியேற முடியாமலும் வேலை கிடைக்காமலும் உண்ண உணவின்றி மூன்று மாதங்களாக இந்திய மீனவர்கள் தவித்து வந்தனர்.
இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கும் இந்திய தூதரகத்துக்கும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தனர். இவர்களது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இதுதொடர்பாக தங்கள் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு தெரிவித்தனர். ஈரானில் 22 மீனவர்கள் நிலை குறித்து வீடியோ பதிவையும் மீட்க வலியுறுத்தி கோரிக்கையும் விடுத்தனர். இதுதொடர்பாக உடனடியாக மீனவர்களை மீட்க வில்லை என்றால் திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களை ஒன்றுதிரட்டி கடலில் இறங்கி போராட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மத்திய மாநில அரசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் மீட்டு குடும்பத்தோடு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரக்கூடிய போக்குவரத்துச் செலவை அரசே ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
- ராஜா