அதிக மகசூல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும்… : முதல்வருக்கு கோரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறிவருகிறார்கள்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு எந்த மாநில அரசுடனும் கலந்து ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது. இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயக அமைப்பு சிதைகிறது. இதனால் தான் இதனை நிராகரிக்க வேண்டியிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிராகரிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுசம்பந்தமாக டெல்டா விவேக் தேவர் நம்மிடம் கூறுகையில், தமிழகத்தில் வேளாண்துறைக்கு என தனி அமைச்சரை நியமித்து முதன்முறையாக வேளாண்பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு அறிவித்தாலும், தன்னோட உழைப்புக்கும், உயிருக்கும் எப்போது மதிப்பும், மரியாதையும் வருகிறதோ அன்றுதான் விவசாயிகள் சந்தோசப்படுவார்கள். தன்னுடைய உழைப்பு திருடப்படுகிறது என்று தெரிந்தும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள.
கணிணியில் வேலைபார்ப்பவர்களை மரியாதைக்குரியவர்களாக பார்க்கும் இந்த சமூகம் காட்டில் வேலை பார்ப்பவர்களை கேவலமாக பார்க்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியால் இணையதளம் மூலம் அரிசியை டவுன்லோடு செய்ய முடியுமா? படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று தன்னுடைய சந்ததியினருக்கு சொல்லித் தரும் இந்த சமூகம் விதைத்தால் தான் சோறு கிடைக்கும் என்பதை இனி சொல்லித் தர வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் கௌரவமாக வாழக்கூடிய நிலை வரும்.
இன்று விவசாயம் சார்ந்த கல்வியை படிக்க அதிகமான மாணவர்கள் முன் வருகிறார்கள். படிக்க முன்வருபவர்கள் விவசாயம் செய்ய முன்வரவேண்டும். பணம் சம்பாதிக்க எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. உணவை கையில் எடுக்க வேண்டுமானால் விவசாயம் மட்டும்தான் உள்ளது. உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் உணவை உள்ளங்கையில் கொண்டு வரவேண்டுமனால் அது விவசாயியால் மட்டும் தான் முடியும். விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஆண்டு முழுவதும் அதிக மகசூல் விளைவிக்கும் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும். வருடம்தோறும் சுதந்திர தினத்தன்று வீரதீர செயல்களில் சாதித்தவர்களுக்க விருது வழங்குவது போல் விவசாயிகளுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு முன்வைக்கிறேன்.
கிராமங்கள்தோறும் நகர்மயமாகி வரும் நிலையில் விளைநிலங்கள் அனைத்தும் வியாபார நிலங்களாக மாறி கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயம் விழிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளை ஊக்குவித்து அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.
– குண்டூசி