தமிழகம்

காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

சென்னை திருவான்மியூர் நியூ பீச் கடற்கரையில் கணவர் கதிரவனுடன் கண்ணாமூச்சி விளையாடினார் அனிதா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன் கதிரவனை கொடூரமாகத் தாக்கினார். இந்த வழக்கில் அனிதாவும் அந்தோணி ஜெகனும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற கதிரவன் இறந்தார். இதைத்தொடர்ந்து முதலில் வழிப்பறி வழக்காகப் பதிவு செய்த திருவான்மியூர் போலீஸார் அதைக் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன். சாப்ட்வேர் இன்ஜினீயர். சென்னை தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி அனிதா என்கிற வினோதினி. இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் திருவான்மியூர், நியூ பீச் கடற்கரை மணலில் கண்களைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடினர். அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர், கதிரவனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அனிதா அணிந்திருந்த 12 சவரன் நகைகள், செல்போன்களை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்தப் புகாரின்பேரில் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீல் தலைமையிலான போலீஸார் கதிரவனை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கதிரவன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது நகை, செல்போன்களை பறித்தவர் யாரென்று தெரிந்தது. தொடர்ந்து மர்மநபரிடமிருந்த அனிதாவின் செல்போன் மட்டும் சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்தது. அந்த செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தபோது சென்னையிலிருந்து மதுரை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம நபர் பயணிப்பது தெரியவந்தது. உடனடியாக சென்னையிலிருந்து போலீஸ் டீம், மதுரைக்கு விரைந்தது. அனிதாவின் செல்போன் சிக்னல், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் விடுதியைக் காட்டியது. இதனால் போலீஸார், விடுதிக்குள் சென்று அனிதாவின் செல்போனை வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் குறுவார்பட்டியைச் சேர்ந்த அந்தோணி ஜெகனை கைதுசெய்தனர். அவரிடமிருந்து நகைகள், செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்தோணி ஜெகனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அந்தோணி ஜெகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அனிதாவும் அங்குதான் எம்.ஏ படித்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது, காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் அனிதாவுக்கும் கதிரவனுக்கும் கடந்த 31 நாள்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு இருவரும் சென்னை ஜமீன்பல்லாவரத்தில் குடியிருந்துள்ளனர். புதுமணத் தம்பதிகளான இவர்கள் இருவரும் திருவான்மியூர் நியூ பீச் கடற்கரைக்கு வந்தபோது காதலன் அந்தோணி ஜெகனையும் அங்கு அனிதா வரச்சொல்லியுள்ளார். கண்ணாமூச்சி விளையாட்டுக்காக கதிரவனின் கண்களைத் துணியால் கட்டிய அனிதா, எஸ்.எம்.எஸ் மூலம் அந்தோணிக்கு தகவலைத் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த அந்தோணி, கதிரவனின் தலையில் சுத்தியால் அடித்ததோடு இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த கதிரவன், உயிருக்குப்போராடினார். இந்தச் சமயத்தில் அனிதா அணிந்திருந்த 12 சவரன் நகைகள், கதிரவன், அனிதா ஆகியோரின் செல்போன்களைப் பறித்த அந்தோணி அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் மூலம் அந்தோணியை கைது செய்துள்ளோம். கொலை முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனிதாவையும் நாங்கள் கைது செய்துள்ளோம்“ என்றனர். அனிதாவிடம் போலீஸார் விசாரித்தபோது, முதலில் கொள்ளையர்கள் தாக்கியதாக கூறியுள்ளார். அனிதாவுக்கு உதவிய அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீஸாரிடம் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதாவது, கதிரவன் உயிருக்குப்போராடிபோது அனிதா, பதற்றமில்லாமல் இருந்துள்ளார். அதன்பிறகே அனிதா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அனிதாவிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்ததால் அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. விசாரணையின் முடிவில் அனிதா மூலம்தான் கொலை முயற்சி சம்பவம் நடந்தது தெரியவந்தது. போலீஸாரிடம் அனிதா கொடுத்த வாக்குமூலத்தில்,நானும் அந்தோணியும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால், எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர். அந்தோணியை என்னால் மறக்க முடியவில்லை. இதனால் சேர்ந்துவாழ நானும் அந்தோணியும் திட்டமிட்டோம். இணையதளத்தில் சென்னையில் ஆள்நடமாட்டமில்லாத கடற்கரை எது என்று தேடினோம். அதில் முட்டுக்காடு, கொட்டிவாக்கம், திருவான்மியூர் என மூன்று கடற்கரை பகுதிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் திருவான்மியூர் கடற்கரைப் பகுதியை தேர்வு செய்தோம். முன்கூட்டியே மதுரையிலிருந்த அந்தோணியை சென்னைக்கு வரவழைத்தேன். கதிரவனும் நானும் திருவான்மியூர் கடற்கரைச் சென்றோம். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். திருமணமான நாளிலிருந்து கதிரவனிடம் நான் சரிவர பேசவில்லை. இதனால் அவர் என் மீது கோபத்திலிருந்தார். கடற்கரையில் அவரிடம் மனம்விட்டுப் பேசினேன். அதன்பிறகுதான் கண்ணாமூச்சி விளையாட கதிரவன் சம்மதித்தார். அவரின் கண்களை நான் கட்டியபிறகு அந்தோணிக்கு போனில் தகவல் தெரிவித்தேன். அங்கு வந்த அந்தோணி, கதிரவனைத் தாக்கிவிட்டு நகை, செல்போன்களை பறித்துவிட்டுச் சென்றார். நானும் கொள்ளையர்கள் தாக்கியதுபோல நடித்தேன். ஆனால், என்னுடைய நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸாரிடம் மாட்டிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
போலீஸாரிடம் மாணவன் அந்தோணி ஜெகன் சிக்கியபோது, அனிதாவுடன் வாழத்தான் கதிரவனைத் தாக்கினேன்’ என்று கூறியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கதிரவனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் கதிரவனின் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் போலீஸார் விசாரித்தபோது,அந்தோணியுடன் அனிதா வாழ விரும்பியதைத் திருமணத்துக்கு முன்பே அவர் சொல்லியிருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. கதிரவனுக்கும் இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறி கதறியழுதுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button