அரசியல்

இட ஒதுக்கீடு போராட்டம்.. தியாகிகளின் எண்ணிக்கையில் குழப்பம்..! : கலைஞர் கொடுத்தது 25 : ஸ்டாலின் அறிவித்தது 21 : அதிகாரிகள் தவறா?

பொதுவாக சுதந்திர போராட்ட தியாகிகள், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு கடைசி கட்ட கவுரவமே அவர்கள் பெயரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைப்பதுதான்.கடந்த 1987ல் நாடே திரும்பிப் பார்த்த மாபெரும் போராட்டமான வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், போலீஸ் தடியடி பிரயோகத்திலும் சிக்கி 25 பேர் பலியானார்கள்.

1989ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அமைந்ததும் வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சி.என்.இராமமூர்த்தி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இட ஒதுக்கீட்டில் பலியான 25 பேர்களையும் சமூக நீதி போராட்ட தியாகிகள் என தன் கையெழுத்து போட்ட அங்கீகாரமிட்ட சான்றிதழை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதோடு, அந்த குடும்பத்துக்கு தலா 3 லட்ச ருபாய் கருணைத் தொகையும், மாதந்தோறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் உதவித் தொகையும் இப்போது அந்த உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வழங்கினார் கலைஞர்.

அதன் தொடர்ச்சியாக அந்த தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பு சார்பில் பல ஆண்டுகளாக சி.என்.இராமமூர்த்தி கோரிக்கை வைத்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த தேர்தலுக்கு முன்பும் திமுக அரசு அமைந்தால் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார் சி.என்.இராமமூர்த்தி.

இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானார்.

முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடிகளை செய்து வரும் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டார்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்களின் நினைவாக விழுப்புரத்தில் 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அதே, நேரம் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டது.

1989ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 25 பேர்களுக்கு இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் என சான்றிதழும் உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இப்போதும் 25 பேர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.

அப்படி இருக்க சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 பேர்களின் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததால் பலியான இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 பேரா… 25 பேரா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இது குறித்து வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரும் அப்போது முதல்வர் கருணாநிதியுடன் ஒப்பந்தம் செய்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான குடும்பங்களுக்கு கருணைத் தொகையும், மாத ஓய்வூதியமும் பெற்றுத் தந்த சி.என்.இராமமூர்த்தி அவர்களிடம் பேசினோம்…

“சார் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியானது 25 பேர்தான். இவர்களுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைத்து தியாகிகள் சான்றிதழும், 3 லட்சம் கருணைத் தொகையும், ஆயிரத்து ஐநூறு ரூபாய் மாத உதவித் தொகையும் வாங்கித தந்தேன். இப்போது அந்த உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு தமிழக முதல்வராக அப்பா கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்ததை மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராகி அதே தியாகிகளை கவுரவப்படுத்தும் விதமாக மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டு நிறைவு செய்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து மணிமண்டப அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் பலியானவர்கள் 21 என அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பத்தையும் சொல்லி விடுபட்ட 4 பேர்களையும் சேர்த்து 25 தியாகிகளுக்கான மணிமண்டபமாக கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆவணங்களையும் கொடுத்து விட்டு வந்தேன்.

முதல்வரும் அதை துறைரீதியில் சரி பார்ப்பதாகவும், விடுபட்டிருந்தால் சேர்த்து கொள்வதாகவும் கூறினார்” என்கிறார் சி.என்.இராமமூர்த்தி. இதிலிருந்து ஒன்று தெரிகிறது… முதல்வருக்கு குறிப்பு கொடுக்கும் அதிகாரிகள் முழுமையான வரலாறுகளை கவனிப்பதில்லை என்பது மட்டும் உண்மை.

  • கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button