சரிந்த… தேமுதிகவின் வாக்கு வங்கி
விஜயகாந்த் கடும் உழைப்பால் உருவாக்கிய தேமுதிக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியால் மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது.
தேர்தல் ஆணையம் விதியின்படி, குறைந்தது 6% வாக்குகளைப் பெற்ற கட்சியே மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் பெற முடியும். ஆனால், மக்களவைத் தேர்தலில் வெறும் 2.19% வாக்குகளையே பெற்ற தேமுதிக அந்த அங்கீகாரத்தை இழக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்து வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. வடசென்னை, கள்ளக்குறிச்சியில் திமுகவிடமும் திருச்சி, விருதுநகரில் காங்கிரஸிடமும் வீழ்ந்துள்ளது.
2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக 2006 சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு 8.33% வாக்குகளைப் பெற்று அரசியிலில் தன் வாக்கு வங்கியை நிரூபித்தார். பின், 2009 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. அப்போது, 10.3% வாக்குகளைப் பெற்று முத்திரை பதித்தது.
ஆனால் அதற்குப் பின் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் வெறும் 5.19% ஆனது. 2019ல் இன்னும் மோசமாகி 2.19% மட்டுமே கிடைத்துள்ளது.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. ஆனால் அதன் மோசமான மற்றொரு விளைவாக கட்சியின் வாக்கு சதவீதம் 7.9% ஆக சரிந்தது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க முயன்றபோது, விஜயகாந்த்தை முதல்வர் ஆக்குவதாகக் கூறிய, மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார். சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இருந்த அந்தக் கூட்டணிக்கு தலைமையேற்றார் விஜயகாந்த். இதன் மூலம் மற்றொரு சறுக்கலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு 2.39% வாக்குகளே கிடைத்தன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநிலக் கட்சியாகவும் நீடிக்க முடியாத நிலைக்கு வந்துள்ளது தேமுதிக. இதனால், விஜயகாந்த் பிரபலமாக்கிய அக்கட்சியின் முரசு சின்னம்கூட கைவிட்டுப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
உடல்நலம் குன்றி சரியாகப் பேச முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த் கட்சி நிர்வாகத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டார். இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ் ஆகியோர் கட்சியை தங்கள் விருப்பப்படி நடத்தினர். அவர்களது தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைந்திருப்பதாகவும் கட்சியையே குட்டிச்சுவராக ஆக்கிவிட்டதாகவும் நீண்டகால விஜயகாந்த் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.