வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. மூத்த அமைச்சர்களுடன் பாமக குழு நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக&- பாமக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட வழங்க வேண்டுமென்று பாமக வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென்று போராட்டங்களை நடத்தியது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்தால் மட்டுமே அதிமுக-வுடன் கூட்டணி என்றும் பாமக அறிவித்திருந்தது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மூத்த அமைச்சர்களுடன் பாமக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு ஓப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் இருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். 2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அறிக்கையின் படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.