அரசியல்

பதவிக்கு வந்த 10 நாளில் மயானத்தை மடக்கிய திமுக மந்திரி! : ஆவடி அட்ராசிட்டி

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. பதவி ஏற்ற மே 7ம் தேதியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் தனது இமேஜை ஜெட் வேகத்தில் உயர்த்தி வருகிறார்.

முந்தைய திமுக அரசு போல எந்த குற்றச்சாட்டிலும் மந்திரிகள் தொடங்கி எம்.பி., எம்.எல்.ஏக்கள் கட்சியினர் அனைவருக்கும் தனித்தனியாக கிளாஸ் எடுத்திருக்கிறார் முதல்வர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சர்ச்சையில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மந்திரிகள் பலரும் மக்கள் நலப்பணியில் அதிரடி காட்டி முதல்வர் ஸ்டாலின் பாராட்டை பெற்று வருகிறார்கள்.

ஆனால் திருஷ்டி மாதிரி ஒரே ஒரு மந்திரியின் செயல்பாடு ஆட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் ஓவர் அட்ராசிட்டியாக இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வர அதன் உண்மை தன்மை அறிய களத்தில் இறங்கினோம்.

கிடைத்த தகவலை விசாரித்தால் பகீர் ரகமாக இருந்தது. இருக்காதா பின்னே மந்திரியாக பதவி ஏற்ற 10 நாளில் பூர்வீக மககள் பயன்படுத்தி வரும் மயான பூமியை தன் மகன் மூலமாக மடக்கிய விவரம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இவ்வளவு நேரம் எந்த மந்திரியைப் பற்றி சொல்கிறேன் என யோசிக்கிறீர்களா… சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் வீட்டுக்கு 1.5 டன் பால்கோவாவை எடுத்து சென்றார் என கூறி பரபரப்பு ஏற்படுத்திய பால்வளத்துறை அமைச்சர் நாசர்தான்.
சரி விஷயத்துக்கு வருவோம்.

ஆவடி கிராமத்தில் பூர்வீக மக்கள் வசிக்கிற பகுதியில் அந்த மக்களின் பயன்பாட்டுக்காக ஒரு மயான பூமி உள்ளது. சுமார் 7 ஏக்கருக்கு மேல் இருந்த அந்த மயான பூமியை அந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன் படுத்தி வருகிறார்கள்.

அந்த மயான பூமியின் ஒரு பகுதியை ரயில்வே நிர்வாகம் தனது விரிவாக்க பணிகளுக்காக எடுத்து கொண்டது. இன்னொரு பக்கம் கிராமத்தினர் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த மயான பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கடடப்பட்டது. திடீரென இந்த நடவடிக்கையை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அந்த கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என நூற்றுக்கணக்கில் அந்த பகுதி மக்கள் அங்கே திரண்டதால்பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

மயான இடத்தை ஆக்ரமித்து சுற்றுச்சுவர் கட்டியவர்களிடம் ஊர் மக்கள் விசாரித்தால் “வக்பு வாரியத்தால் 1.5 ஏக்கர் மயான நிலப்பகுதியை இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கியதாக” கூறியதாலும் அதற்கான எந்த ஆவணங்களையும் அவர்கள் காட்டாததால் பதட்டம் மேலும் அதிகரித்தது.


இதற்கிடையில் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக போலீசுக்கு தகவல் போக மாவட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஊர் மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதோடு அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த காம்பவுண்டு சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

ஊர் மக்கள் திரண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த பகுதிக்கு தொடர்பில்லாத ஊரில் இருந்து இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஒரு உடலை புதைக்க எடுத்து வந்ததால் மேலும் பதற்றம் அதிகரித்தது. இந்த பதட்டமான சூழலிலேயே நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அந்த உடல் புதைக்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மயான பூமியை அந்த ஆவடி கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவான மயான பூமியாகத்தான் இருந்துள்ளது. எந்த பிரிவுக்கும், எந்த மதத்திற்கும் தனியாக எந்த பகுதியும் ஒதுக்கப்படாமல் பொதுவாக இருந்த இடத்தில் திடீரென இஸ்லாமியர்களுக்காக பலகோடி மதிப்புள்ள இடத்தை காம்பவுண்டு சுவர் போட்டு ஆக்ரமிக்கும் நடவடிக்கை அந்த பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காரணமும் இருக்கிறதாம்..

ஆவடி மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை சில ஆயிரம் மட்டுமேவாம். அதோடு, ஆவடி மாநகராட்சியின் பின்புறம் இருந்த பாசன ஏரி வீட்டுவசதி துறையால் குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்ட நேரத்தில் இஸ்லாமியர்களுக்காக மசூதிக்கு தனி இடமும் அதை ஒட்டி சுமார் 4 ஏக்கர் அரசு ஏரி நிலம் இஸ்லாமியர்களின் மயான இடமாகவும் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் போது வேண்டும் என்றே பூர்வீக கிராமத்தில் இருக்கும் மயான பூமியில் பல கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

ஆதோடு, எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மயான இட ஆக்ரமிப்பு பிரச்சனை தலை தூக்கும் என்று பகீர் கிளப்புகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இதற்கிடையில் மயானத்தை மடக்கி இஸ்லாமியர்களுக்காக தனி பகுதியை ஏற்படுத்த கட்டப்பட்ட காம்பவுண்டு சுவரை இடித்து தர வேண்டும் என கூறி அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கங்கள் கலெக்டர், தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பி இருகிறார்கள். ஆனால் எல்லா அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார்களாம். காரணம், இந்த மயான இடம் மடக்கும் விவகாரத்தில் பின்னால் இருந்து முழு ஆதரவு கொடுப்பது அந்த தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வும், பால்வளத்துறை அமைச்சருமான நாசர் என குற்றம் சாட்டுகிறார்கள் ஆவடி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள்.

இது குறித்து ஆவடி கிராமத்தில் பூர்வீகமாக குடியிருக்கும் மோகன் என்பவர் கூறியதாவது:

ஆவடி கிராமத்தில் உள்ள 9 கிராமங்களுக்கு பாசன ஏரி அரசின் வீட்டுவசதி வாரியத்தால் எடுக்கப்பட்டதால் விவசாய நிலங்கள் அனைத்தும் மனைகளாக மாறியது. ஆவடியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் ஒரு சில குடும்பங்கள்தான் பூர்வீகமாக குடியிருக்கிறார்கள். இப்ப காம்பவுண்டு போடப்பட்டு ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் சுமார் 30 வருஷத்துக்கு முன் ஒரு சில இஸ்லாமியர்கள் உடல்கள் புதைக்கப்பட்டது, ஆவடி ஏரியை வீட்டுவசதி துறை கையில் எடுத்த போது இஸ்லாமியர்களுக்கு மசூதிக்கு தனியாக இடமும், அவர்கள் உடல்களை புதைக்க மூன்றரை ஏக்கருக்கு மேல் ஏரி இடமும் ஆக்ரமித்து எடுத்து கொண்டார்கள்.

அதன் பிறகு இந்த 30 ஆண்டில் ஒரு இஸ்லாமியர்களின் உடலும் இப்ப சர்ச்சையான மயான பூமியில் புதைக்க எடுத்துகிட்டு வரல. 2008ம் வருஷம் இப்ப அமைச்சரா இருக்குற நாசர் அப்ப ஆவடி சேர்மன். அப்ப ஒரு நாள் ராத்திரியோட ராத்திரியாக இப்ப ஆக்ரமிக்க நினைக்குற மயான பூமியில 50, 60 உடல்களை புதைத்தது போல மண் குவியலை வைத்து இடத்தை ஆக்ரமிக்க நினைத்தார்கள். அப்போதும் ஊர் மக்கள் கொந்தளிப்பாகி ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து கலெக்டர் எல்லாம் வந்து பார்த்து இடத்தை மடக்க வேண்டும் என்பதற்காக செட்டப் செய்யப்பட்ட மண் குவியல்களை எல்லாம் அகற்றிவிட்டார்கள்.

அப்பவும் திமுக சேர்மனாக இருந்த இப்போதைய மந்திரி நாசர்தான் இடத்தை ஆக்ரமித்து தர ரொம்ப முயற்சித்தார். நாங்க ஊர் மக்கள் பயங்கர எதிர்ப்பா இருந்ததால அப்போதைக்கு அந்த பிரச்சனை அமைதியானது.

அதுக்கப்புறம் பல வருஷமா திமுக பவர்ல வரல. இதுக்கு இடையில 2011ம் வருஷம் ஆவடியை சேர்ந்த அப்துல்ரஹீம் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாகி மந்திரியாகவும் ஆனார். ஆனா அவர் குடும்பம் பூர்வீக்மா பல வருஷமா இந்த ஆவடியில இருப்பதால இந்த மயான இட விவகாரத்துல ரஹீம் தலையிடவே இல்ல.

இப்ப மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கு. ஆவடி நாசர் அமைச்சராவும் ஆகிட்டாரு. அவர் அமைச்சர் ஆன பத்தே நாளில் மறுபடியும் இந்த மயான பூமிய மடக்கிப் போட அதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார். அவர் நேரடியா தலையிடாம அவர் பையன் மூலமா சமூக தொண்டு செய்யும் ஒரு இஸ்லாமிய அமைப்பு பேர்ல மயானத்தை மடக்க பாக்குறாங்க.

அமைதியா வாழும் ரெண்டு சமூக மக்கள்கிட்ட தேவையில்லாம மோதல் ஏற்பட வழி செய்றாங்க. கலெக்டர், தாசில்தார் அப்படின்னு அதிகாரிங்க யாரும் புகார்மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் புகார் மனுவ அனுப்பி இருக்கோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிச்சி கட்டின காம்பவுண்டுசுவரை இடிச்சித்தரணும்.

ஏற்கனவே நாசர் ஆவடி சேர்மனா இருந்தப்போ விளையாட்டு மைதானமா ஒதுக்கப்பட்ட்டிருந்த பல ஏக்கர் நிலத்தையும் கவுன்சிலர்கள் துணையோட வித்துட்டாரு. இப்ப அமைச்சரானதும் மயானத்தை மடக்க வராரு.

எல்லா அதிகாரிங்ககிட்டயும் மனு குடுத்திருக்கோம். எங்கயும் ஆக்‌ஷன் இல்ல. எந்த ஆக்‌ஷனும் எடுக்காம போனா ஊர் மக்களை திரட்டி பெரிய போராட்டம் சாலைமறியல் செய்யவும் நாங்க ரெடி.

எங்களுக்கு பூர்வீகமான மயான பூமிய எந்த சிக்கலும் இல்லாம அரசு மீட்டுக் குடுக்கனும் என படபடவென பொறிந்து தள்ளினார் மோகன்.
இந்த குற்றசாட்டு குறித்து அமைச்சர் நாசர் அவர்களிடம் கருத்து கேட்க முயற்சித்தோம். பல நாள் முயற்சித்தும் அவர் தரப்பிலிருந்து “அமைச்சர் பிசியாக இருக்கிறார். ப்ரீ ஆனதும் பேசுவார்” என்றே பதில் கிடைத்தது.

சரி அதிகாரிகளிடம் விவரம் கேட்க முயற்சித்தாலும் எந்த அதிகாரியும் பேச தயாராக இல்லை.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு பதவிக்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து எதிர்க்கட்சிகளே பாராட்டி வருகிறார்கள். மக்களிடம் நல்ல பெயரை வாங்காவிட்டாலும் கெட்ட பெயரை வாங்கிவிடாதீர்கள் என தன் சக அமைச்சர்களுக்கும், கட்சியினருக்கும் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆரம்பகால விசுவாசி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ள அமைச்சர் நாசரின் செயல்கள் பலவும் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு போகாமலா இருக்கும்.

மேயர் கனவில் மகன்?!

இதில் டெயில் பீஸ் என்னன்னா… அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா இப்போதே மேயர் கனவில் நகரில் வலம் வருகிறாராம். ஆவடி மாநகராட்சியில் அறிவிக்கப்படாத அசுர சக்தியாக “மேயர் அறையில்” அமர்ந்து கொண்டு இப்போதே அதிகாரிகளை ரூல் செய்து வருகிறார் என்றார்கள் விவரம் ஆறிந்தவர்கள். இந்த மயான பூமி ஆக்ரமிப்பு விவகாரத்திலும் அப்பாவான அமைச்சர் நாசரின் ஆசியோடு களத்தில் நேரடியாக இறங்கியது அவர்தானாம். அதோடு வைரஸ் சூழலில் இறந்தவர்கள் உடல்களை புதைக்கும் பணியை செய்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் இந்த மயான இட ஆக்ரமிப்பு விவகாரத்தில் பின்புலத்தில் இருக்கிறதாம். அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகியே அமைச்சரின் மகன் ஆசிம்ராஜாதானாம்.

ஏதோ ஆவடியில் மட்டுமல்ல. சமிபத்தில் சென்னை நொளம்பூரிலும் இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மயான பூமியில் திடீரென இஸ்லாமியர்களுக்கு தனி இடம் என ஒரு ஆக்ரமிப்பு முயற்சி நடந்து கடும் எதிர்ப்புக்குப்பின் அந்த முயற்சி கைவிடபட்டதாம்.

ஆனால், ஆவடி கிராமத்தில் மயான பூமியில் அதிகாரத்தை பயன்படுத்தி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு பாதியில் நிற்கிற விஷயத்தில் ஆர்.டி.ஓ.விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

நில ஆக்ரமிப்பு விவகாரங்களில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், மயானத்தை மடக்க மாஸ்டர் பிளான் போடுவது இதுதான் முதல்முறை என்பதும், புதிதாக பதவி ஏற்ற திமுக அரசில் மயான நில ஆக்ரமிப்பு குற்றச்சாட்டில் ஒரு அமைச்சரின் தலையீடு இருப்பதும் இதுதான் முதல் முறை.


யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என சாட்டையை சுழ்ற்றி வரும் அதிரடி முதல்வர் ஸ்டாலின் இந்த ஆவடி கிராம மயான நில ஆக்ரமிப்பு விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை அறிய தொகுதி மக்கள் ஆவலோடு இருக்கிறார்களாம்.

ரகசியம்:

ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான நாசரின் மகன் ஆசிம்ராஜா செய்கிற அட்ராசிட்டிகள் பலவும் ஏற்கனவே முதல்வரின் கவனத்திற்கு புகார்களாக போனதாகவும், இதனால் கடுப்பான முதல்வர் கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சரை அழைத்து கடுப்படித்து விட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இப்போது மீண்டும் அதே அமைச்சர் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக மயானத்தை மடக்கும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அமைச்சர் பதவிக்கே வேட்டாக மாறினாலும் ஆச்சர்யமில்லையாம்.

சர்ச்சையில் முடிந்த சமாதான கூட்டம்!

அனுமதி இன்றி பொது மயானத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு இடத்தை ஒதுக்கி அத்துமீறி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டதால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் ஆர்.டி.ஓ.தேவிப்பிரியா தலைமையில் ஆவடி பூர்வீக கிராம மக்களுக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையில் இந்த சமாதான கூட்டத்தை நடத்தினார். காவல்துறை சார்பில் துணை கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தாசில்தார் ரஜினிகாந்த் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுவான இடமாக இருந்த மயான பூமியை பிரித்து தனியாக காம்பவுண்டு போட்டதை இடிக்க வேண்டும் என ஊர் மக்களும், இஸ்லாமியர்களுக்கு தனி இடம் கண்டிப்பாக வேண்டும் என இஸ்லாமியர்களும் கோரிக்கை வைத்ததால் சமாதான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேடு, நகராட்சி கமிஷனர் சொல்லித்தான் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டதாக இஸ்லாமியர்கள் தரப்பில் சொன்னாலும் அதற்கான ஆவணங்கள் இல்லை. சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடத்தியும் எந்த முடிவும் எடுக்கபடவில்லை. கடைசியில், சர்ச்சைக்குரிய மயான பூமியை பார்வையிட்டு அதன் பின் நடவடிக்கை எடுக்கிறேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவரை இடிப்பது குறித்து ஆய்வு நடத்திய பின் முடிவு செய்து கொள்ளலாம் என சொல்லி அப்போதைக்கு பரபரப்பை கட்டுப்படுத்தி இருக்கிறார் ஆர்.டி.ஓ தேவிப்பிரியா.

கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button