தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இருந்த போது, மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இந்தக் கல்லூரியில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாத நபர்களை சம்பந்தமில்லாத துறைகளில் பணியில் அமர்த்தி உள்ளார்கள். வக்பு வாரிய கல்லூரியின் சொத்துக்களை தங்கள் இஷ்டத்துக்கு கொள்ளையடித்ததாக அன்வர்ராஜா நிர்வாகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் வக்பு வாரிய கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் முறைகேடு புகார்களில் சிக்கிய அன்வர்ராஜா, வீடுகளில் சிபிஐ சோதனை செய்து விசாரணை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நிர்வாகத்தையும் கலைத்து அரசு அதிகாரியை நியமித்தது உயர்நீதிமன்றம். இதனால் ஏற்கனவே பேராசிரியர்கள் பணிக்காக பணம் வாங்கிய நபர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய முடியாமல் போனது. இதனால் பணம் கொடுத்தவர்கள் தொல்லை தர ஆரம்பித்தவுடன் பழைய நிர்வாகிகள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் சென்று முறையிட்டு இருக்கிறார்கள்.
முறைகேடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு பணிநியமனம் செய்த நிர்வாகிகள் தாங்கள் வசூல் செய்த தொகையில் குறிப்பிட்ட தொகையை அமைச்சர் நிலோபர் கபிலிடம் கொடுத்திருக்கிறார்கள். (வீடியோ ஆதாரம் உள்ளது). அமைச்சர் நிலோபர்கபிலும் தமிழ், பொருளியல், வணிகவியல் துறைகளின் பேராசரியர் பணியிடங்களுக்கு ஐந்திற்கும் மேற்பட்டவர்களை பரிந்துரை செய்திருக்கிறார். அவர்களிடம் அவரே நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொண்டு பேராசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. வக்பு வாரிய தலைவராக இருந்த அன்வர்ராஜாவும் ஆங்கிலம், பொருளியல் துறைகளுக்கும், அலுவலக ஊழியர்கள் இரண்டு பேருக்கும் பரிந்துரை செய்து பணிநியமனம் செய்திருக்கிறார். இவர்களிடம் இவரே நேரடியாக பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மதுரை விளாங்குடி பாத்திமா மகளிர் கல்லூரிக்கு எதிரில் அன்வர்ராஜாவுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றும் இந்த பணத்தில் நிர்வாகிகள் வாங்கி கொடுத்ததாக கூறுகிறார்கள். மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளரின் உறவினரும், அன்வர் ராஜாவுக்கு வீடு வாங்கி கொடுத்தவரும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் அல்லது பணிநிரந்தரம் செய்ய வழிவகை செய்யுங்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் தரப்பிடம் தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருசிலருக்கு பாதிப்பணத்தை கொடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக அமைச்சர் நிலோபர்கபில் வக்பு வாரிய கல்லூரியின் ஆட்சி மன்ற குழுவை அமைத்து பணம் வாங்கிய நபர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் மூன்று வருடம் வருடாந்திர உறுப்பினர் கட்டணம் ரூ 100 செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாதவர்கள் தாமாகவே பொதுக்குழு உறுப்பினர் தகுதியை இழப்பார்கள் என்று பைலாவில் தெளிவாக இருப்பது தெரிந்திருந்தும் அவசர அவசரமாக அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில் போட்டியிட்ட யாருமே சந்தா தொகையை பைலாவின் விதிப்படி செலுத்தவில்லை.
தேர்தல் அட்டவணையையும் முழுமையாக பின்பற்றாமல், வாக்காளர் பட்டியலிலும் குளறுபடி செய்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் எண்ணிக்கை வேறுபாடுகள் இருந்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விதிகளுக்கு முரணாக தேர்தல் நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவே இந்த ஆட்சிமன்ற குழு தேர்தலை ரத்து செய்ய வேண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தேர்தலுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இதேநேரத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசுக்கு எதிரான தீர்ப்பே வந்துள்ளது.
தமிழக அரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் கல்லூரியின் செயற்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு தேர்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது அன்வர்ராஜாவுக்கும், அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். தேர்தலை நடத்தி பணம் கொடுத்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்து விடலாம் என்ற கனவு நொறுங்கிப் போனதால் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார்களாம் நிலோபர் கபிலும், அன்வர் ராஜாவும்.
ஏற்கனவே இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளது. மேலும் கடந்த கால நிர்வாகிகள் பணம் வசூல் செய்தது முதல் யார் யாருக்கு பணத்தை பிரித்து கொடுத்தார்கள் என்பது வரை வீடியோவும், ஆடியோவும் வெளிவந்தால் இந்த வழக்கிற்கு மேலும் வலுசேர்க்கும். பெண் பேராசிரியரிடம் தனது கணவர் முன்னிலையிலேயே சில நிர்வாகிகள் உரையாடிய வீடியோவும் சிலர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வருகிறது. எது எப்படியோ உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும் என்கிற பழமொழிக்கேற்ப தவறு செய்தவர்கள் தண்டனை பெறப்போகிறார்களா? தண்டனையில் இருந்து தப்பிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் வக்பு வாரிய கல்லூரியின் நலம் விரும்பிகள்.