கொதிக்கும் மக்கள்!
அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்திற்காகவும், ரசிகர்கள் திரையுலக கலைஞர்களுக்காகவும், தனிப்பட்ட நபர்கள் குடும்ப விஷேசங்களுக்காகவும் பேனர்கள் வைத்து வருகின்றனர். எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அது பிறருக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தி விடக் கூடாது. ஆனால் இப்படி வைக்கப்படும் பேனர்கள் பல சமயங்களில் கீழே விழுந்து, பொதுமக்களை காயப்படுத்தி விடுகின்றன. சில சமயங்களில் உயிர் பலி வாங்கும் விபரீத நிலையும் ஏற்படுகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகள் சாலையோரங்களில் நீண்ட தூரத்திற்கு பேனர்கள் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இது வாகன ஓட்டிகளுக்கு எந்தளவிற்கு இடையூறாக உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒரு துயர சம்பவம் ஆளுங்கட்சியின் பேனர் விழுந்து நிகழ்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்தை ஒட்டி, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பேனர் ஒன்று, சுபஸ்ரீ மீது சாய்ந்தது.
இதில் அவர் சாலையில் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி ஒன்று ஏறி விபத்தை உண்டாக்கியது. இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஏராளமான கனவுகளுடன் இருந்து வந்த இளம் பெண்ணின் உயிர் பறிபோன சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளுங்கட்சி பொறுப்பேற்றுக் கொள்ளுமா? அந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது? எப்படி ஈடு செய்யப் போகிறார்கள் இந்த இழப்பை?
பொதுமக்களாகிய நாங்கள் சட்டத்தை மதித்து நடந்து கொள்கிறோம். ஆனால் அரசியல்வாதிகளாகிய நீங்கள் ஏன் சட்டத்தை மதிக்காமல் பேனர்கள் வைக்கிறீர்கள்? இந்த கேள்வி சுபஸ்ரீ சார்பாக தமிழக மக்கள் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதற்கிடையில் அதிமுக ஐடி விங், சுபஸ்ரீ தலைக்கவசம் அணியவில்லை என்று தவறான தகவலை இணையத்தில் பரப்பிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவர் சிவப்பு நிற ஹெல்மெட்டை அணிந்திருந்தார் என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்பிற்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான அலங்கார வளைவு விழுந்து ரகுபதி என்ற இளம் பொறியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது Who Killed Ragu என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது. இதுபோன்ற விதிமீறல்களை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை கண்டித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் பேனர் வைக்கும் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலையோரங்களில், நடைபாதைகளில் கட்டாயம் பேனர்கள் வைக்கக் கூடாது.
இது பயணிகளின் கவனத்தை திசை திருப்பும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. மீண்டும் சாலையெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டதைக் கண்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இந்த விஷயத்திற்கு எப்படி நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்? நீதிமன்ற உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த விஷயத்தில் தவறு செய்யும் அரசியல் கட்சிகளிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை மிரட்டி ஒடுக்கும் நடவடிக்கையில் தான் ஈடுபடுகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு சட்டவிரோத பேனர்கள் வைக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட வேண்டும். அப்படி வைத்தால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்துவிட வேண்டும்.
இத்தகைய நடைமுறையை கடைபிடிக்கத் தொடங்கினால், தானாக அரசியல் கட்சிகளின் பேனர்கள் குறைந்துவிடும். ஆனால் இதனை அரசியல் கட்சி தலைவர்கள் செய்வார்களா? குறிப்பாக ஆளுங்கட்சி அனைத்து தரப்பினருக்கும் முன்னுதாரணமாக செயல்படுமா? தொடர்ந்து உயிர் பலி கேட்கும் பேனர் கலாச்சாரம் என்று தான் முடிவுக்கு வருமோ? என்ற குரல் இந்த சம்பவத்தின் மூலம் தமிழக மக்கள் மனதில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
- முத்துப்பாண்டி