வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு திமுக இளைஞர் அணி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடி வெட்டும் தொழிளர்களுக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தினந்தோறும் கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்திய தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சலூன் கடை வைத்து முடி வெட்டும் தொழில் செய்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரது பிரத்தியோக வாட்ஸ் ஆப் செயலி மூலம் தமிழ்நாட்டில் உள்ள சலூன் கடை தொழிலாளர்களை கண்டரிந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்க உத்திரவிட்டிருந்தார்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சலூன் கடைகளில் பணிபுரிந்த முடி வெட்டும் தொழிலாளர்ளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு ஏற்பாட்டில் அரிசி காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு. பரமக்குடி திமுக நகர்செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்று 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினர்.
இந்த பொருட்களை பெற்றுக்கொண்ட முடிவெட்டும் தொழிலாளர்கள் இது குறித்து கூறும்போது…..
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாட்ஸ்அப் மூலம் எங்களின் கஷ்டத்தை தெரிவித்தோம். உடனடியாக எங்களுக்கு உதவி செய்ய திமுக இளைஞரணி நிர்வாகிகள் எங்களின் இருப்பிடத்திற்கே வந்து உதவினார்கள்.
இக்கட்டான நிலையில் உதவி செய்த திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தங்களது நன்றியை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- செய்தியாளர் ராஜா