வாகனங்களுக்கு ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலி எரிபொருள் விற்பது குற்றம்… : இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரிக்கை
தமிழகத்தில் ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலியான வாகன எரிபொருள் விற்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ‘பயோ டீசல்’ என்ற பெயரில், விநியோகஸ்தர்கள் சிலர் போலியான வாகன எரிபொருளை விற்பனை செய்வது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்த எரிபொருளை, ரகசியமான முறையில் கிடங்குகளிலிருந்து விநியோகித்து வருகின்றனர்.
இத்தகைய செயல்கள், இந்தியாவில் ‘பிஎஸ்-6’ தூய்மையான மோட்டார் வாகன எரிபொருட்களை வழங்கி சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பாதுகாக்க மத்தியஅரசு மேற்கொள்ளும் முயற்சிகளை சீர்குலைக்கக் கூடியது.
உண்மையான ‘பயோ டீசலை’ மாநில அரசின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்று மட்டுமே விற்பனை செய்ய முடியும். எனவே ‘பயோ டீசல்’ என்ற பெயரில் நேரடியாக போலி எரிபொருளை விற்பனை செய்வது சட்டவிரோதம் மட்டுமின்றி தண்டனைக்குரிய செயலும் ஆகும். தற்போது இயங்கிவரும் எண்ணெய் நிறுவனங்களை தவிர்த்து வேறு எவருக்கும் ‘பயோ டீசல்’ விற்பனை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பெட்ரோல் பங்க்குகளில் விற்கப்படும் டீசலில் 7 சதவீதம் வரை சேர்ப்பதற்காக மட்டுமே ‘பயோ டீசலை’ விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக, சேலம்,நாமக்கல், சங்ககிரி, தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இந்தப் போலி ‘பயோ டீசல்’ விற்பனை செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன், வாகனங்களையும் சேதப்படுத்துகிறது. மேலும், பொதுமக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.