பஞ்சாயத்து தலைவர் கொலை : பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் கறிவிருந்துக்கு சென்ற இடத்தில் எதிரிகள் சுற்றிவளைத்ததால் வீட்டை பூட்டிக் கொண்டு படுக்கை அறையில் பதுங்கி இருந்த பஞ்சாயத்து தலைவரை வீடு புகுந்து வெட்டிக் கொன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்தவர் சிங்கம் என்கிற பொன்சீலன்..! கடந்த உள்ளாட்சி தேர்தலில் அகரம் கிராம பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பொன்சீலன் மீது 4 கொலை, கடத்தல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அண்மையில் நடந்த தேர்தலிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை பொன்சீலன் சாமர்த்தியமாக தோற்கடித்ததாக கூறப்படுகின்றது. தேர்தலில் இவரது செயல்பாட்டின் வேகத்தை பார்த்து கூட்டாளிகள் சிங்கம் என்று அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அகரத்தில் கோவில் கொடை நடப்பதால் பஞ்சாயத்து தலைவர் பொன்சீலனை, அங்கு துணை தலைவராக உள்ள தவசிக்கணி என்பவர் கறி விருந்துக்கு வீட்டிற்கு அழைத்துள்ளார்.
ஊரே கோவில் கொடை விழாவில் கூடியிருந்த நிலையில் பொன்சீலன் தனியாக தவசிக்கனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது ஆதரவாளர்கள் காரில் இருந்த நிலையில் கையில் அரிவாளுடன் ஆவேசமாக வந்த உள்ளூரை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை கண்டு ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்துவிட, ஆயுதமில்லாமல் நிராயுதபாணியாக வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட பொன்சீலன் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு படுக்கை அறையில் பதுங்கியுள்ளார்.
பின் பக்க வாசல் இல்லாத ஓடுகள் வேயப்பட்ட வீடு என்பதால் முன்பக்க வாசலில் அரிவாளுடன் ஒருவரை நிறுத்தி விட்டு, 3 பேர் அரிவாளை வாயில் கவ்வியபடி வீட்டிற்கு மேல் ஏறி, ஓடுகளை பிரித்துக் கொண்டு வீட்டிற்குள் குதித்துள்ளனர். உள்ளே நுழைந்ததும் படுக்கை அறையில் பதுங்கி இருந்த பொன்சீலனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர். கோவிலில் கிடா வெட்டு நடப்பதற்கு முன்பாக சினிமா பாணியில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொன்சீலனின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் கடத்தல் தொழிலில் ஸ்கெட்ச் போட்டு எதிரிகளை வீழ்த்திய பொன்சீலன் பழிக்குபழியாக கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட பொன்சீலன் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஆயில் கடத்தல்காரர் ஒருவரிடம் அடியாளாக இருந்து அவரை வீழ்த்தி விட்டு, தனது கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியதாகவும், கடத்தல் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் ஏராளமான நிலபுலன்களை வாங்கிக் குவித்ததாகவும் கூறப்படுகின்றது.
தொழிலில் தனக்கு இடையூறாக இருக்கும் நபர்களை கொன்ற இரு வழக்குகளில் இருந்து பொன்சீலன் தப்பிய நிலையில், கூட்டாளியான லெனின் என்பவரை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கில் பொன் சீலனின் பெயர் இடம் பெற்றது. இதையடுத்து அவரை பழிவாங்க லெனினின் தம்பிகள் சுற்றிவந்துள்ளனர். அவர்களுடன் அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவரின் தம்பிகளும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறும் காவல்துறையினர் கொலை தொடர்பாக 4 பேரையும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.