விலகும் கொடநாடு கொலை மர்மம்… : பயத்தில் பழனிச்சாமி..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது விலகாத மர்மமாகவே இன்னும் உள்ளது.
இதனிடையே, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, கலைவாணர் அரங்கின் வெளியே அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கு முடியும் நிலையில் திமுக அரசு வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது.
அதில், என்னையும், அதிமுக பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அரசு வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, அவதூறு செய்தியை பரப்ப பொய் வழக்கை ஜோடிக்கின்றனர்.
நாங்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. சோதனையை தாங்குவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
அதற்கு உரிய வாய்ப்பு தரவில்லை. எந்த வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். திமுக அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டமன்றத்தை அதிமுக முழுமையாக புறக்கணிக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கொடநாடு விவகாரம் குறித்த விவாதத்தின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்று அதிமுகவினரை சாடினார். தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல என்று தெரிவித்தார்.
முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்தோடு அல்ல; இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலே கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை என்றும் அப்போது ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டமன்றத்தில் அவருக்கு முதல் உரையாகும். சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, கூட்டணி கட்சித் தலைவர்கள், சபாநாயகர் என அனைவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.
அப்போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விருப்பப்பட்டேன். ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர் என்று தனது வேதனையையும் அவர் வெளிப்படுத்தினார்.
தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், கொரோனா நிலவரம், பஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகளை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கு எப்போது உழைப்பேன் என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும், நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
அதேபோல, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் அப்போது கேட்டுக் கொண்டார்.