தமிழகம்

குடியுரிமை திருத்த சட்டம் : ‘கோல’ப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாத்தியமான பல வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று விஸ்வருபமெடுத்தன கோலம் போடும் போராட்டங்கள். இந்நிலையில், புத்தாண்டுக் கோலங்களில் அன்புள்ள மோடி #ழிளி_சிகிகி என்று எழுதி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது பல புதிய கோணங்களுக்கு வழிவகுப்பதாய் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2020ஆம் ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க உற்சாகமான முறையில் புத்தாண்டு வரவேற்கப்பட்டதைப் போலவே தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.கொண்டாட்டங்களின் குறியீடாகக் கோலமிடும் வழக்கம் தென்னிந்தியக் குடும்பங்களுக்கே உரித்தானது. குறிப்பாக தமிழகம் இதில் எப்போதும் நம்பர் 1.

அந்தவகையில், சென்னை திருவேற்காடு அருகில் உள்ள வீடுகளில் புத்தாண்டை முன்னிட்டு வாசற்கோலங்கள் இடப்பட்டன. சாலையைக் கடந்து செல்வோருக்குத் தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக, ஹேப்பி நியூ இயர் வகையறா வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த வரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தெரிவிக்கப்பட்டிருந்த வாசகம் காண்போரை ஈர்க்கும் விதமாக அமைந்தது…
அன்புள்ள மோடி நோ சி.ஏ.ஏ. என்று பிரதமரை பாசமாக விளித்து கோரிக்கை வைக்கும் தொனியில் இருந்த அந்த வாசகம் தொடர்ந்து பல கேள்விகளைத் தூண்டுவதாகவும் அமைந்தது.

கோலங்களின் வாயிலாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் இந்த முறைமையை ஒரு அழகிய புன்சிரிப்போடு கடந்து போய்விட முடியும். ஆனால், கூட்டங்கள், கூட்டணிகள் போன்றவற்றால் மட்டுமே பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது குடும்பங்களாலும் பேசப்படுகிறது என்பதுதான் இந்த கோலத்தின் மூலம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது.

மேலும், புதிய ஆண்டு தொடங்குகிறது என்பது பொதுவாகவே ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம். ஆனால், இந்த 2020 தொடங்கும்போதே இப்படிப் போர்க்களமாகத் தொடங்குகிறதே என்ற, அடிமனதில் அமைதியாக உறங்கும் சமூக அச்சத்தையும் முடுக்கிவிடுவதாக இந்தக் கோலம் இருக்கிறது.

ஒரு குடும்பப் பெண்ணுக்கே இருக்கக்கூடிய நேர்த்தியுடன் இந்த கோலம் வரையப்பட்டிருக்கிறது. அருகில் இருக்கும் ஹேப்பி நியூ இயர் வசனமும் அதேபோல தேர்ந்த கையால் வரையப்பட்டிடு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
ஆனால், அன்புள்ள மோடி… #நோ_சி.ஏ.ஏ என்னும் வசனம் அவ்வளவு நேர்த்தியாக எழுதப்ப்படவில்லை என்பதை கொஞ்சம் கவனித்தால், சி.ஏ.ஏ. மீதான எதிர்ப்பு எண்ணம் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட்டிருக்கின்றது என்பது இந்தக் கோலத்தில் கவலையளிக்கும் அம்சம்.

அந்த வகையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் நூதன போராட்டத்தை மாணவிகள் முன்னெடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முன் அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மாணவிகள் கைதுக்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். புத்தாண்டு கோலங்கள் போராட்டக் கோலங்களாக மாறியுள்ளன.

இந்த நிலையில், கோலம் போட்டதற்காக பெண்கள் கைது செய்யப்படவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த விஸ்வநாதன் அது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அப்போது வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட ஒரு பெண் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்த ஏ.கே.விஸ்வநாதன், இது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • ப.விஜயகுமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button