புகார்களை கண்டுகொள்ளாத மாநகராட்சி ஆணையர்..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப் பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகளும் ஆணையாளரும் புகார்கள் மீது எந்தவித விசாரணையும் செய்யாமல் புகார் மனுக்களை கிடப்பில் போட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் புகார்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு புகார்தாரருக்கு 15 தினங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் மதிப்பதில்லை. முதலில் மாநகராட்சி தலைமை பொறுப்பில் இருக்கும் ஆணையாளர் பின்பற்றினால் தானே அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.
தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் இதற்கு முன்னர் பணிபுரிந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றி ஆட்சியாளர்களிடம் பாராட்டைப் பெற்றவர் தான். ஆனால் ஏற்கனவே ஏராளமான முறைகேடுகள் நடைபெற்ற சென்னை மாநகராட்சிக்கு பொறுப்புக்கு வந்ததிலிருந்து இவரது செயல்பாடுகள் மந்தமாகவே இருக்கிறது. தனக்கு நேரடியாக வரும் புகார்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டாலே முக்கால்வாசி புகார்களை முடித்து விடலாம். ஆனால் விழாக்களில் தலை காட்டுவதோடு மற்ற பணிகளில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வருகிறார் என ஏராளமானோர் இவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சென்னை மாநகராட்சியில் காட்சிகள் மாறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு பணம் சம்பாதித்து வந்தது அனைவரும் அறிந்ததே. அதனால் தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகாரிகள் இன்னும் மாறவில்லை.
இனி இவர்களிடம் புகார்கள் கொடுப்பதால் எந்த பிரயோஜனமும் இருக்காது. முதலமைச்சரிடம் முறையிட்டாலாவது நடவடிக்கை எடுக்கப் படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.