திருமாவுக்கு பிளாஸ்டிக் நாற்காலி… : சர்ச்சையில் திமுக அமைச்சர்..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சென்று சந்தித்த நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் ராஜக்கண்ணப்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க திருமாவளவன் சென்றதாக சொல்லப்படுகிறது.
அது சம்மந்தமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. அமைச்சர் சொகுசான சோஃபாவில் அமர்ந்தபடியும், விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அமைச்சரிடம் பேசுகிறார். அதுவும் அந்த பழைய உடைந்த நாற்காலி அந்த நேரத்திற்கு மட்டுமே எடுத்து வந்து போட்டதாக தெரிகிறது.
இந்த புகைப்படங்கள் போலியானவை என்று சில தரப்புகள் கூறுகின்றன. ஆனால், சமூகத்தில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் அந்த புகைபடத்தை பகிர்ந்திருப்பதும், குறிப்பிட்ட இந்த நிகழ்வினை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிராமல் இருப்பதும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
இந்த புகைப்படத்தை பகிருபவர்கள், ”பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவனுக்கு பழைய பிளாஸ்டிக் நாற்காலியை தேடிப்பிடித்து எடுத்து வந்து அதில் அமர வைத்தது ஏன்?
அருகில் அவ்வளவு பெரிய சோபா இருந்தாலும், பழைய பிளாஸ்டிக் நாற்காலியில் இவரை அமர வைத்திருப்பது ஏன்? சமூக நீதியை முன்வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சியிலேயே சாதி பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அதுவும் கூட்டணி கட்சியின் தலைவருக்கு இந்த நிலைமையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “திருமாவளவனும், நானும் பல ஆண்டுகால நண்பர்கள். நான் அவரை ஷோபாவில் அமரச்சொன்னேன். ஆனால் அவர் உட்காரவில்லை. அவர்தான் பிளாஸ்டிக் சேரில் அவருடைய வசதிக்கேற்ப அமர்ந்து பேசினார். உங்களுடன் பேசவேண்டும் என்று நாற்காலியில் அமர்ந்தார். அப்படி உட்காருவது திருமாவின் மேனரிசம். இந்த விவகாரம் குறித்து நண்பர் திருமாவளவனே விளக்கம் அளித்திருக்கிறார்.
நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள். அந்த காலத்தில் பாயில் அமர்ந்து பேசியிருக்கிறோம். இது ஒரு சாதாரணமான சம்பவம். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. இயல்பாக நிகழ்ந்த ஒருசம்பவத்தை தேவையின்றி சிலர் அரசியலாக்கி விட்டனர்.” என்று அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து, “அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் அருகில் ஷோபாவில் வந்து அமரும்படி மூன்று முறை அழைத்தார். ஆனால் நான் தான் முகம் பார்த்து பேச முடியாது மற்றும் நடுவில் ஒரு சிலை இருந்த காரணத்தினால் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தேன். இதை சில குதர்க்கவாதிகள் தவறாக பரப்புகின்றனர்” என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில்தான் திருமாவளவன் அளித்த விளக்கத்தையும், இந்த விவகாரத்தையும் இத்தோடு விட்டுவிடுமாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியில் கேட்டுக் கொண்டார்.