அரசியல்தமிழகம்

கொரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையை விரும்பிய எம்.எல்.ஏ

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சதன்பிரபாகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஒரு வருடமாக சிறப்பான முறையில் மிகவும் எளிமையாக தனது பணியை செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் பரமக்குடி சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தனது சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். கடந்த சில மாதங்களாக தனது பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார். அந்த பரிசோதனையில் இவரது மகன் வசந்த்க்கும், உதவியாளர் முனியசாமிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதை அறிந்ததும் அவர் சிகிச்சை பெற சென்ற இடம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை. தனது மகன் வசந்த், உதவியாளர் முனியசாமி ஆகிய மூன்று பேரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நோய் தொற்று பரவலின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (திமுக) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ரிசிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான் ஆகிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ பழனி, உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு, கோவை மேற்கு அம்மன் அர்ஜூனன் ஆகிய அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால் மேலே குறிப்பிட்ட திமுக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள இவர்கள் சென்ற இடம் பிரபல தனியார் மருத்துவமனைகள். ஆனால் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த பரமக்குடி தொகுதி எம்எல்ஏ தனது மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையை தேர்வு செய்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்றைய சூழ்நிலையில் கொரோனா என்னும் கொடிய நோயானது ஏழை, பணக்காரர் பார்த்து வருவது இல்லை. யாருக்கு எப்படி வரும் என்பதை யாரும் அறிய முடியாது. ஆகையால் இந்த நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்கி வருகிறார்கள். தனியார் மருத்துவ மனைகளை விட உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நமது மாநிலத்தில் தான் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களை உயர்ந்த மனிதர்களாக சமுதாயத்திற்கு காட்டிக் கொள்கிறார்கள். நமது மாநிலத்தைப் பொறுத்தவரை மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அனைத்து வசதிகளையும் பெற்றிருக்கிறோம்.


இது குறித்து பரமக்குடி சட்டமன்றத் தொகுதி மக்களிடம் கேட்டபோது,
அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்ட மக்களாகிய நாங்கள் மட்டும்தான் அரசு மருத்துவமனைகளையம், அரசு பள்ளிகளையும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் எங்களிடம் ஓட்டு வாங்கி மந்திரிகளானதும், பணம் சம்பாதித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அதேபோல் தங்களுக்கோ, தங்களது செல்லப் பிராணிகளுக்கோ சிறிய நோய் என்றால் கூட அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் ஏழைகள் மருத்துவம் பார்க்கும் இடமாக அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி பேசி வருகிறார்கள். ஆனால் எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்ததால் தொகுதி மக்களான நாங்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் தனது மகன் வசந்த், அவருடைய உதவியாளர் முனியசாமி ஆகியோருடன் சிகிச்சை பெற்று வருவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் விரைவில் இந்த கொரோனா என்னும் கொடிய நோயில் இருந்து மீண்டு வந்து தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

இவரைப் போன்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அரசு மருத்துவமனைகளை நாடினால் தனியார் மருத்துவ மனைகளிலும் அதிக கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும். ஆகையால் அரசியல் வாதிகளும் அரசு மருத்துவமனைகளை நாடினால் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது ஒருவித நம்பிக்கை ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று ஏமாறாமல் காப்பாற்றப்படுவார்கள். இதுவே பெரும்பாலான சாமானியர்களின் விருப்பமாக உள்ளது. இனிமேலாவது திருந்துவார்களா? அரசியல்வாதிகள் ? காத்திருப்போம்..

  • உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button