அரசியல்

கரூர் அ.தி.மு.க-வினரிடம் நான்கு வாக்காளர் அட்டைகள்! : செந்தில் பாலாஜி

“கரூர் தொகுதி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள், தங்கள் பெயரில், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த 10 மாதிரியில் அனைவருமே அ.தி.மு.க-வினர். இப்படி, 1,032 பூத்துகளில் எத்தனை நபர்கள் இருப்பார்கள் என்று தேர்தல் அதிகாரி சரியான கணக்கீட்டை வழங்க வேண்டும்” என்று செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 16-ம் தேதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டார். ஆனால், அதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டுகிறார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த, 16.11.2020 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர்கள் முகாம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் கரூர் மாவட்டத்திலுள்ள 1,032 வாக்குச் சாவடிகளிலும், ஆளும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய குடும்ப உறவு முறையைக் கொண்டவர்களும் பல்வேறு பூத்களில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்துவருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் இதுவரை மூன்று புகார்கள் வழங்கியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரி, தனக்குக் கீழ் நிலையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.

அதில், நாங்கள் 10 மாதிரிகளை எடுத்துவைத்திருக்கிறோம். கரூர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள், தங்கள் பெயரில், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த 10 மாதிரிகளில் இருக்கும் அனைவருமே அ.தி.மு.க-வினர். இப்படி 1,032 பூத்துகளில் எத்தனை நபர்கள் இருப்பார்கள் என்று தேர்தல் அதிகாரி சரியான கணக்கீட்டை வழங்க வேண்டும். இந்தப் பிரச்னையை, தி.மு.க தலைவரிடம் எடுத்துச் சென்றோம்.

அவரது அறிவுறுத்தலின்படி, தி.மு.க அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆஸ்.எஸ்.பாரதி, தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார். அங்கிருந்து வந்த மனுவுக்கும் இவர்கள் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறார்கள். கரூரில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்கள் என்றால், 19 வயதுக்கு மேல் உள்ள இளைய தலைமுறையினர்தான். ஆனால், 45 வயது, 50 வயது உள்ளவர்கள் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள். இது போன்ற பல தில்லுமுல்லுகளைச் செய்து அ.தி.மு.க வென்றுவிடலாம் என்று நினைக்கிறது. இதை கரூர் மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால், மக்கள்தான் எஜமானர்கள். கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் முன்வைக்கப்பட்ட இந்தத் திருத்தங்களையும் தேர்தல் அதிகாரிகள் சரியாகச் செய்யவில்லையென்றால், நாங்கள் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்.

போலி வாக்காளர்கள் ஒரு பூத்திலேயே 10 பேர் இருக்கிறார்கள். முறையாக அவர்களுடைய பழைய பூத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, புதிய பூத்தில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியலில் அதிகாரிகள், தாங்கள் செய்த தவறை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். முன்னாள் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்த தவறைவிட, தற்போதைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி முறைகேடுகளை முன்னின்று செய்துவருகிறார். ஜனவரி 20-ம் தேதி வந்த பிறகுதான், நமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறதா, இல்லையா என்று தெரியும். முகாமில் 100 பேர் மனு கொடுத்தார்கள். ஆனால், நேரடியாக அதிகாரிகளைப் பார்த்து 300 பேர் மனு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். நடக்கும் முறைகேட்டை தடுக்கவில்லையென்றால், தவறு செய்யும் அனைவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்’’ என்றார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button