நூற்றாண்டு வரலாறு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை
பாரம்பரிய மிக்க தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.
இந்தியாவில் நீண்ட பாரம்பரியம் கொண்ட சட்டமன்றம் என்ற பெருமை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானதாகும். ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் 1919-ம் ஆண்டு மாண்டெகு செம்ஸ் போர்டு (Monatagu Chelmsford) சீர்திருத்தங்களின் அடிப்படையில் இந்தியர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களை உருவாக்கி குறைந்தபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் தற்போதைய உத்திரப்பிரதேச மாநிலம் பகுதிகளைக் கொண்ட ஐக்கிய மாகாணம் ஏற்படுத்துப்பட்டன. நான்கு மாகாணங்கள் முதன் முதலில் உருவாக்கப்பட்டன.
சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 1920ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் போட்டியிட்டு நீதிக்கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான முதல் நீதிக்கட்சி அமைச்சரவை சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. 1921ம் ஆண்டு ஜனவரி 12&ம் தேதி சென்னை மாகாண சுயாட்சி சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த துன்னாட் கோமகன் சட்டமன்றத்தை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாறு தொடங்கியது. சுப்புராயுலு ரெட்டியைத் தொடர்ந்து, பனகல் ராஜா, முனுசாமி நாயுடு, ஒப்பிலி ராஜா, பி.டி.ராஜன், சுப்புராயுலு நாயக்கர், டாக்டர் நடேசன், தியாகாராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரைத் தொடர்ந்து 17 ஆண்டுகளாக மெட்ராஸ் மாகாண அரசியலில் நீதிக்கட்சி கோலோச்சியது.
1921ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டமன்றத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழாவை 1997ம் ஆண்டு கலைஞர் கோலாகலமாக கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. உண்மையில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை கடந்த ஜனவரி 15ம் தேதியே அப்போது அதிகாரத்தில் இருந்த அதிமுக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் சுதந்தரத்திற்குப் பிறகு 1952&ம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டமன்றத்தையே தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தொடக்கமாக அதிமுக கருதுவதால் கொண்டாடப்படவில்லை.
நீதிக்கட்சியின் நீட்சியாகத் திகழும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இருப்பதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் பங்கேற்புடன் கோலாகலமாக தற்போது கொண்டாடப்பட்டது. இந்த விழா பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விழா நடைபெற்ற செயின் ஜார்ஜ் கோட்டை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். சென்னை மாகாண சட்டமன்றத்துக்கான முதல் தேர்தலில் நில உரிமையாளர்களும், பட்டதாரிகளும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் பதவி பீரிமியர் என்று அழைக்கப்பட்டது. நீதிக்கட்சி கொண்டு வந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தான் நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்படும் இட ஒதுக்கீடுக்கு அச்சாரமாகும். இந்தப் பாரம்பரியமே இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே 69% இட ஒதுக்கீடு செயல் வடிவம் பெற வழிவகுத்தது.
முதல் தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக்கட்சி சட்டமன்றத்தின் முதல் அமர்விலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் காரணமாக 1927&ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராக சமூக நீதிப்போராளி முத்துலட்சுமி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஆகிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சட்டங்களை முதல் கூட்டத்திலே நிறைவேற்றியது தமிழ்நாடு சட்டமன்றம் தான்.
1937-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் சட்ட பேரவையாகவும், சட்ட மேலவையாகவும் உருவாக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு 205 ஆக குறைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1967-ம் ஆண்டு 234 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வரை அப்படியே தொடர்கிறது. 1967-ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் வென்று, அறிஞர் அண்ணா முதலமைச்சரான போது சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. தற்போது நடைபெற்ற நூற்றாண்டு விழாவின் போது ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்த கலைஞரின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்துள்ளார்.
1977-ம் ஆண்டு சட்டமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜர் படத்திற்கு பிறகு ஒரு முதல்வரின் படத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் வந்தது இதுவே முதல் முறை.
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம்; வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்; சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்; இல்லை அங்கேயே நின்றுவிடுவோமா? இல்லை. சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்..!” என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி தமிழில் தமது உரையை அவர் தொடங்கினார்.
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; பெருமை அடைகிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள். தமிழ் இலக்கியத்திலும், தமிழக அரசியலிலும் முக்கியப் பங்காற்றியவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் கலைஞர். தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் சினிமாவிற்கும் பெரும் பங்காற்றியவர். புரட்சிகரமான கருத்துகள் மூலம் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. அவரது படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
– சூரிகா