ஸ்டாலின் என்னும் நான்…
மு.க.ஸ்டாலின் என்னும் நான் என்ற வார்த்தையைக் கேட்பதற்காக திமுகவினர் எவ்வளவு ஆவலுடன் காத்திருந்தார்கள். தொண்டர்களின் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என அரசின் அத்தனை பொறுப்புகளிலும் தனக்கென தனி அடையாளத்தை பதிவு செய்தவர்தான் ஸ்டாலின். இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் அமர்ந்து மக்கள் நலத்திட்டங்களுக்காக பணி செய்த ஸ்டாலின் இப்போது முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்கிறார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் தனது தந்தை என்பதாலோ ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி எளிதில் கிடைத்திடவில்லை. கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் தோளோடு தோள் நின்று தொண்டர்களோடு களப்பணியாற்றி திராவிட கொள்கைக்காகவும் சமூக நீதிக்காகவும் பலமுறை சிறை சென்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தான் ஸ்டாலின். 14 வயதிலேயே கட்சிப் பணியில் இணைத்துக் கொண்ட ஸ்டாலின் படிப்படியாக பொதுக்குழு உறுப்பினர், இளைஞர் அணி செயலாளர் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீரிய மிக்க வாரிசாக தனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் திறம்பட செயலாற்றினார். இவரது செயல்திறனுக்கு கிடைத்த பரிசாய் 1989 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஸ்டாலினுக்கு இருந்த தீராத தாகத்தை அறிந்த மக்கள் 1996, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் சட்டமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்த்தனர்.
சென்னை மாநகருக்கு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் ஸ்டாலின். 2011, 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குச் சென்றார். தனது சிந்தனையாலும், செயல்திறனாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அடுத்தடுத்த பதவிகள் இவரைத் தேடி வந்தன. திமுகவின் செயல் தலைவராக இருந்த போது ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்து மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்த காரணமாக இருந்தார் ஸ்டாலின். இந்நிலையில் திமுக தலைவரும் தனது தந்தையுமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்.
கலைஞரின் மறைவால் திக்குமுக்காடிய தொண்டர்களை ஸ்டாலினால் வழி நடத்த முடியுமா என விமர்சனம் செய்தவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார் ஸ்டாலின். அன்று ஸ்டாலின் என்ற அரசியல் தலைவரின் பயணம் சமூக நீதியைக் காக்க பல்வேறு தளங்களிலும் வீரியத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக ஸ்டாலின் முன்னெடுத்த போராட்டங்கள் ஏராளம். இதன் காரணமாக தமிழர் தொடர்பான ஒவ்வொரு நிகழ்வின் போது ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என காத்துக்கிடந்தது தமிழகம். கலைஞரின் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள் மக்களுக்கு பாதுகாப்பாக மட்டுமே இருக்கும் என கட்சியினரால் புகழப்பட்டார்.
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழக முதலமைச்சராக முதல்வர் நாற்காலியில் அமரப்போவது யார் என தமிழகத்தையும் தாண்டி ஒலித்த இந்த ஒற்றைக் கேள்விக்குத்தான் இப்போது பதில் கிடைத்திருக்கிறது. இதைத்தான் திமுக தொண்டர்களின் கொண்டாட்டங்கள் உணர்த்தி வருகிறது. திமுகவின் பிரச்சார பாடல்களில் ஒலித்தது போலவே மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், விருப்பமாகவும் உள்ளது.
-சூரியன்.