இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது: அமமுக தங்கதமிழ்ச்செல்வன்
பரமக்குடியில் நவம்பர் 20ஆம் தேதி அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி அமமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ஒரு சில நாட்களுக்கு முன் பரமக்குடிக்கு வருகை புரிந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இரட்டை இலைச்சின்னத்தை எதிர்த்து நிற்பது நியாயம்தானா? ஏற்கனவே கேட்கக்கூடாதவர்கள் பேச்சைக் கேட்டு ஜெயலலிதா கொடுத்த பதவியை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவிற்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதனை நினைவு கூர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சர் உதயகுமாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். “ஏண்டா லூசுப் பயலே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு நடுத்தெருவில் நிற்பதற்கு காரணமே நீங்கள் தானடா”
நாங்கள் கவர்னரைச் சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். நீங்கள் திட்டம் போட்டு எங்கள் பதவியை பறித்துள்ளீர்கள். கடந்த தேர்தலில் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாதான் அனைவருக்கும் வாக்கு சேகரித்தார்கள். நீ மந்திரியாயிட்ட நாங்கள் எம்எல்ஏவாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையிலும் உங்களை எதிர்த்து அரசியல் செய்து மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறோம். உங்களது ஊழல் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். நிச்சயமாக இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் வாங்காது. ஜெயலலிதாவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறி 11 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி அதிமுகவிற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சபாநாயகர் தனபால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசுகையில் இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டுக்கு பத்தாயிரம் வீதம் 20 தொகுதிகளுக்கும் ஐந்தாயிரம் கோடி ஊழல் செய்து வைத்திருக்கும் பணத்தை செலவு செய்ய இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று ஊழல் பட்டியலை வாசித்தார். குட்கா ஊழலில் அமைச்சர் உள்பட காவல்துறை உயர்அதிகாரிகளும் சிக்கியிருக்கிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறையில் 5500 கோடிக்கு டெண்டர் விடப்பட்டதில் முதல்வரின் உறவினர்கள் 1500 கோடி ஊழல் செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்யாததை நீதிமன்றமே கண்டித்துள்ளது. உள்ளாட்சித்துறையில் 4000 கோடி ஊழல், மின்சாரத்துறையில் தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகவும் பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாத இவர்கள் எங்கே இடைத்தேர்தல் நடத்தப் போகிறார்கள். அப்படித் தேர்தல் நடந்தாலும் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது என்று சரவெடியாக பேசி முடித்தார்.
எது எப்படியோ இடைத்தேர்தல் நடந்தால் பணம் விளையாடும் என்பது மட்டும் தெரிகிறது. பணத்திற்காக வாக்குகளை விற்காமல் தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடக்கூடிய, தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட, தொகுதியிலேயே தங்கி தொகுதி மக்களுக்காக பாடுபடக்கூடிய ஒருவரையே மக்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.
-ராஜா