உங்கள் தொகுதியில் ஸ்டாலின் : புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது, மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்று, மக்கள் முன்னிலையிலேயே ஒரு பெட்டியில் வைத்து பூட்டினார். திமுக ஆட்சி அமைந்ததும் நூறு நாட்களில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதேபோல் கடந்தகால ஆட்சி மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசும் அமைந்தது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, தீர்வு காண்பதற்காக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு தனியாக ஐ.ஏ.ஸ் அதிகாரி ஒருவரை நியமித்தார் முதல்வர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற பெயரில் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களுக்கு தமிழகம் முழுவதும் தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்து மூன்று மாத காலத்திற்குள் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் முதல்வரிடம் கொடுத்த புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மடத்துகுளம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் மக்களின் புகார் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுமார் 450க்கும் மேற்பட்டோருக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. உதவிகள் பெற்ற பயனாளிகளில் பெரும்பாலானோர் இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டி புகார் மனு அளித்திருந்தனர்.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விளிம்பு நிலையில் உள்ள குடும்பப் பெண்களின் முன்னேற்றத்திற்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பிலும் ஏராளமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக் கோயில் சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் கோட்டாட்ச்சியர் தீபா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தித்துறை அமைச்சர் வெள்ளக் கோயில் சாமிநாதன் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது மக்களிடம் நேரடியாக பெறப்பட்ட மனுக்களின் மீது பரிசீலனை செய்து பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனி அலுவலர்களை நியமனம் செய்துள்ளார். புகார் மனுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பரிசீலனை செய்து மக்களின் குறைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல நேரத்தில் பொதுமக்களிடம் கூறிய வாக்குறுதிகளும், சொல்லாத பல்வேறு நலத்திட்டங்களும் தற்போது செய்து வருகிறார். தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும் என நம்பிக்கை தரும் விதமாக செய்தித்துறை அமைச்சர் பேசினார்.
ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் தான் ஆகியது. ஆனாலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கிய பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே..
– கார்வேந்த பிரபு