சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்..
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 31-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி வருகிறார். ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்களின் அறிவுரை இருப்பதால் தற்போதைக்கு அவர் யாரையும் பார்க்காமல் தனிமையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து அவரைக் காண்பதற்காக அவரது ஆதரவாளர்களும் சொகுசு விடுதி முன்பு கூடி வருகிறார்கள். அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சசிகலாவை சந்திக்க வந்த காரணத்தினால் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து சசிகலாவை காண்பதற்கு அவருடைய ஆதரவாளர்களும் தொண்டர்களும் சொகுசு விடுதி முன்பு கூடி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலாவை சந்திக்க சொகுசு விடுதியின் முன்பு கூடினர். அவர்களுக்கு சசிகலாவை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதியின் வாயிலை தொட்டு வணங்கி சென்றனர்.
சசிகலா தமிழகம் திரும்பிய உடன் அதிமுக கட்சி அவரிடம் சென்றடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சசிகலா ஆதரவாளர்களின் செயலை அந்த சொகுசு விடுதியில் இருந்த பாதுகாவலர்கள் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதே போல் மாலையில் விடுதி முன்பு வந்த ஆதரவளார்கள் அதிமுக கொடியோடு சசிகலா-விற்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.