தொடரும் வருமான வரித்துறை சோதனை… : அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள்..!
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை வாசித்து ஆதாரங்களுடன் பேசினார். அமைச்சர்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பேசினார்.
திமுக ஆட்சி அமைந்ததும், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது, தற்போது திமுக தலைமயில் ஆட்சி அமைந்ததும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே அதிமுக ஆட்சியிலேயே அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் கவர்னரிடம் வழங்கியிருந்தனர்.
2011, 2016 ஜெயலலிதா ஆட்சியின் போது செய்த ஊழல்களை ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் கவர்னரிடம் வழங்கியிருந்தனர். திமுக இரண்டு முறை ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்திருக்கிறார்கள். விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததும் மற்ற அமைச்சர்களுக்கு பயம் தொற்றிக் கொண்டது. சில முன்னாள் அமைச்சர்கள் நாங்கள் திமுக&வில் சேருவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் முதல்வர் பழனிச்சாமியிடம் புலம்பியிருக்கிறார்கள். உடனே பழனிச்சாமி அன் கோ விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டதோடு, டெல்லிக்குச் சென்று பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
டெல்லி பயணம் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசுவதற்காக ஏற்கனவே அனுமதி கேட்டு தகவல் அனுப்பி இருந்தாராம். டெல்லியிலிருந்து பன்னீருக்கு அனுமதி கிடைத்ததும், அவர் மட்டும் தனியாக கிளம்பிச் சென்றார். பன்னீர் டெல்லிக்கு சென்ற செய்தியறிந்த பழனிச்சாமி டெல்லியை தொடர்பு கொண்டு தானும் சந்திக்க வேண்டும் என்று அனுமதி வாங்கி வேலுமணியை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார். பழனிச்சாமி டெல்லி சென்றதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. சசிகலாவை இணைத்து தேர்தலை சந்திருந்தால் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று வலியுறுத்தியும், பழனிச்சாமி பிடிவாதமாக மறுத்தார். தற்போது சசிகலாவும் தொண்டர்களிடம் பேசுவது, தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சசிகலாவுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தால் நமக்கு ஆபத்து என்று பயந்துதான் டெல்லி புறப்பட்டுச் சென்றதாக பேசபடுகிறது.
ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அறையில் சோதனை, காவல்துறை உயர் அதிகாரி அலுவலகத்தில் சோதனை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் வீட்டில் சோதனை போன்ற பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மத்திய அரசு நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. தற்போது திமுக அரசும் சோதனையை தொடரும். சசிகலாவையும் அடக்கி வைக்க வேண்டும் போன்ற அச்சத்தினால் தான் பன்னீரோட, பழனிச்சமியும் பிரதமரைச் சந்தித்தனர் என்கிறார்கள்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பல மாநிலங்களில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து சில காலத்தில் அந்தக் கட்சிகளை பா.ஜ.க.வுடன் இணைப்பது போன்ற செயல்கள் தான் நடந்துள்ளன. அதே போல் அதிமுக&வையும் இரண்டு, மூன்று அணிகளாக பிரித்து சிலரை பா.ஜ.கவில் சேர்த்து தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுவான இயக்கமாக உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரும் காலங்களில் திமுக&வுக்கு, பா.ஜ.க. தான் போட்டியாக இருக்கும் என்று பேசியதே சாட்சி. அப்படியானால் 60 எம்.எல்.ஏ&க்கள் வைத்துள்ள அதிமுக&வின் நிலை என்னவாகும்.
தமிழகத்தில் ஊழல், லஞ்ச ஒழிப்பத்துறை இயக்குனராக இருக்கும் கந்தசாமி, ஐ.பி.எஸ். மிகவும் நேர்மையானவர், கண்டிப்பானவர் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் அவரிடம் ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
கடுமையான நடவடிக்கைக்கு ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் உள்ளாவார்கள் என்ற பயம் அதிமுக தலைமையில் இருக்கும் பன்னீர் செல்வத்துக்கும், பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்கவும், மத்திய அரசிடம் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என்று வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளவுமே டெல்லி சென்றார்கள் என்றும் பேசப்படுகிறது.
அதிமுக&வில் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் தற்போது திமுகவிற்கு செல்லத் தொடங்கி விட்டார்கள், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக&வுக்கு வெற்றி வாய்ப்பு சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் பாதிப்பு அதிகமாகும் என்பதை முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். ஏற்கனவே திமுக நெருக்கடிய சமாளிக்க அதிமுக பா.ஜ.க&வுடன் நெருக்கம் காட்டினால் தான் தப்பிக்க முடியும் என்று பன்னீர் செல்வம் அதிமுக தலைமை நிர்வாகிகளை தன்பக்கம் இழுத்துள்ளார். இந்த விஷயத்தில் பழனிச்சாமியும், பன்னீரின் பின்னால் செல்ல சம்மதித்துள்ளார்.
என்னதான் பா.ஜ.க&வுடன் அதிமுக நெருக்கம் காட்டினாலும் அதிமுக அமைச்சர்களின் ஊழல் விசாரணை நடவடிக்கைகளில் பா.ஜ.க. தலையிடாது. தவறு செய்தவர்களுக்கு துணை போனதாக மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் பா.ஜ.க., அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கண்டு கொள்ளாது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே ஒவ்வொருவராக வழக்குகளில் சிக்குவார்கள் என்று தமிழக மக்களே தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானலும் தங்கள் வீடுகளில் சோதனை நடைபெறும் என்ற அச்சத்திலேயே உள்ளனர்.
– மகா