ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது : நாஞ்சில் சம்பத் தடாலடி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மாறி, மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.குறிப்பாக பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும், பாஜக&அதிமுக என்ற நிலை மாறி பாஜக&திமுக இடையே தான் போட்டி என்று அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இருப்பினும், கூட்டணி தொடர்வதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் கால் பதிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜக, எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தடம் பதித்தே ஆக வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் எல்.முருகன், பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் இந்த அறிவிப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், “அதிகாரத்தின் மூலம் மிகப்பெரிய துஷ்பிரயோகத்தை செய்ய பாஜக தயாராகி விட்டது. தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும் அந்த காவிக்கும்பலுக்கு நான் எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இன்னோவா கார் அல்ல ஏரோப்ளேன் கொடுத்தாலும் தமிழகத்தில் பாஜக மலராது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்த போது அவருக்கு ஜெயலலிதா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்தார். ஆனால், அதிமுகவில் இருந்து வெளியேறிய சம்பத், கட்சியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த இன்னோவா காரை மீண்டும் அவர்களிடத்திலேயே ஒப்படைத்து விட்டார். இது அந்த சமயத்தில் பேசுபொருளாக இருந்தது. அதிலிருந்து இன்னோவா கார் என்றாலே நாஞ்சில் சம்பத் தவிர்க்க முடியாதவராகி விட்டார்.
- விஜயகுமார்