காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… காவலர்கள் தங்களது உடல் நலனை பேனிக்காக்க ஏதுவாகவும் , தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடும் வகையிலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.அவ்வாறு வாரம் ஒருநாள் ஓய்வு விடுப்பு எடுத்துக்கொள்ள விரும்பாத காவலர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும். காவலர்களின் பிறந்த நாள், திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் விடுமுறை வழங்கப்படும்.
தமிழக காவல்துறை சார்பில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துச் செய்தி மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 24 மணிநேரமும் இதுவரை வேலை நேரமாக இருந்தது. இதனால் பணிச்சுமை காரணமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையும் செய்துள்ளனர். பெண்காவலர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர். இன்று பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை போக்கும் வகையில் நடமாடும் வாகனத்தை தமிழக காவல்துறை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழக காவல்துறை தலைவரின் இந்த அறிவிப்புக்கு காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.