ஜனாதிபதி விழாவில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக வின் முன்னாள் தலைவர் கலைஞரின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்காக குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் செய்தித்துறை அலுவலர்கள்.
இது சம்பந்தமாக செய்தித்துறை அலுவலர்கள் தரப்பில் விசாரித்த போது…. குடியரசுத் தலைவர் விழா என்பதால் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பத்திரிகையாளர்களின் தரப்பில் பேசும்போது…. பாதுகாப்பு கருதி இது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கும் போது பாராளுமன்றத்தில் நடைபெறும் விழாவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியை மட்டும் அனுமதிப்பது போல் இந்த விழாவிற்கும் அதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்த முடிவாக இருக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களையும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்காக அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் குறிப்பிட்ட தொலைக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கால அரசின் அவலங்களை மக்களின் மத்தியில் கொண்டு சேர்த்தது குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, அனைத்து ஊடகத்துறையினரும் சேர்ந்து தான் இன்றைய அரசு அமைவதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை செய்தித்துறை அலுவலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டாமல் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவில் செய்தி சேகரிப்பதற்காக அனுமதி வழங்க வேண்டும் என முதல்வருக்கும் சட்டமன்ற பேரவை தலைவருக்கும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.