தமிழகம்

கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியின் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

பள்ளியின் சுற்றுப் புறத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, தூய்மையின் அவசியத்தை மாணவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைக்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் சிறு குழந்தைகளுக்கு வண்ணமயமாக காட்சிப்படுத்தும்போது, அவர்கள் குதூகலமடைவார்கள், காட்சிப்படுத்தும் பொருளும் அவர்களது மனதில் எளிதில் பதிவாகிவிடும்.

இதனை மனதில் கொண்டு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் தரைதளம் மற்றும் சுவர்களில், உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, அதேபோல் ஆங்கில எழுத்துகளை வண்ணமயமான ஓவியங்களாக அவர்கள் வரைந்து வைத்துள்ளனர். அதன் மீது நடந்தும் குதித்தும் எளிமையாக கற்றுக்கொள்கின்றனர்.

ஆங்கில வினைச் சொற்கள், இணைப்புச் சொற்கள் உள்ளிட்டவை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் விளக்குகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம் கற்பது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக மாறுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வதால் கற்பித்தலும் தங்களுக்கு எளிதாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது மட்டுமல்லாது, தாவரங்களின் பெயர்கள், தானியங்களின் பெயர்கள், தானியங்களின் மருத்துவகுணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வகுப்பறை முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button