தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளை நோக்கி திரும்பும் மாணவர்கள்…
தமிழகத்தில் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்படும் நிகழ்வுகள் சொற்பமாக நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளை விட்டு நீண்ட நாட்கள் ஒதுங்கியிருந்த மாணவர்களின் கல்வி நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக பெற்றோர்களுக்கும் அரசு பள்ளிகள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு வழக்கத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஆண்டாண்டு காலமாக பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள், கல்வியை தாண்டி பல கற்பித்தல் திறன்களை பிள்ளைகள் வளர்த்துக்கொள்வார்கள் என்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச கற்றுக்கொள்வார்கள் என்றும் நினைத்து வந்தனர்.ஆனால், சமீபத்தில் பாலியல் புகார்களில் பல்வேறு தனியார் பள்ளிகள் சிக்கியுள்ளதால் அரசு பள்ளியே மேல் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் கடன் வாங்கி பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வந்தனர்.
ஆனால், அதிகப்படியான கட்டணம், பள்ளி ஒழுங்கு பிரச்சனைகள், கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் ஆன்லைன் வகுப்பிற்காக பிள்ளைகளுக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் தனியார் பள்ளிகளையே கட்டி அழும் நிலை ஏன் என்ற கேள்வி சில பெற்றோர்களுக்கு எழுந்திருக்கலாம்.
இதனிடையே, ஆட்சி மாறிய பின்னர் அரசு பள்ளிகளில் சீரமைக்கப்படும் கட்டமைப்புகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விதிமுறைகள், தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் என்ற பாகுபாடு இல்லாத மாநில அரசின் உத்தரவுகள் என அரசு பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு ஈர்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகமாகும் என்றும் எதிபார்க்கப்டுகிறது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் நீட் தேர்வு குறித்தான குழப்பமும் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு தான்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் கொண்டு செல்லப்படும். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இரு முறை பேசப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியை நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தும்.
தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழையவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க காரணம், ஆளுநர் மாளிகையை தி.மு.க., முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தான் என்று கூறினார்.
– வெ.சங்கர்