பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய வைத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூர கொலை சம்பவம் அரங்கேறி இது வரை கொலையாளிகள் குறித்து எந்த ஒரு தடையமும் சிக்காத நிலையில், அதே பகுதிக்கு அருகே இன்று காலை தோட்டத்து வீட்டில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கிடமான விதத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்திருப்பதாக சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சி தகவல் காட்டுத்தீ போல் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டியன்கோயில் அருகே உள்ளது முத்தியாநரச்சல். இங்குள்ள தோட்டத்து வீட்டில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் லோகநாதன் மற்றும் அவரது மனைவி குழந்தை, தாயார் முத்துமணி (67) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காலை தனது குழந்தையை பள்ளிக்கு லோகநாதன் அழைத்து சென்றுள்ளார், அவரது மனைவி அருகில் சென்றிருந்த நிலையில், தாய் முத்துமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு திரும்பி வந்த லோகநாதன், தாய் முத்துமணி வீட்டினுள் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கயிறை அறுத்து தாயாரை கீழே இறக்கினார். பின்னர் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூவர் கொலை நடந்த பகுதிக்கு அருகே மூதாட்டியின் மரணம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பல்லடம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோவர்த்நாம்பிகா, கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் அதிவிரைவு அதிரடி படை முத்தியாநரச்சல் பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை கண்டறிந்த போலீசார் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதனிடையே முத்துமணியின் மகன் லோகநாதன் தனது தாயாரின் உடலில் இருந்து இரண்டு சொட்டு ரத்தம் தரையில் சிதறிக்கிடப்பதாகவும், தனது தாயாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆய்வாளர் கோவார்த்நாம்பிகாவிடம் உறவினர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மதியம் சுமார் 2.30 மணி வரை ஆய்வாளர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை முடிவிற்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஏற்கனவே இதே பகுதியில் மூவர் படுகொலை செய்யப்பட்ட அச்சத்தில் இருந்து மீளாத நிலையில், மூதாட்டி தோட்டத்து வீட்டில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் இறந்து கிடந்தது பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.