நீரில் மூழ்கிய மாணவிகளை சேலையால் மீட்ட பெண்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூர் அருகே உள்ளது வலசுபாளையம் இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியம் என்பவரது மகள் சகுந்தலா(14), அருகில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை புத்தரச்சலில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு தனது தோழிகள் இந்திராணி, நாகராணி, யோகலட்சுமி ஆகியோருடன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது நடந்துவரும் போது காலில் சேர் சகதி ஒட்டிவிட்டதால் அதனை கழுவ கள்ளிப்பாளையம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் படிக்கட்டில் இறங்கி கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி ஒரு மாணவி வாய்காலில் விழுவதை கண்ட மற்ற மாணவிகள் மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக வாய்க்காலில் குதித்து காப்பாற்ற முயன்று நீரில் மூழ்க துவங்கினர்.
இந்நிலையில் மாணவிகள் உயிக்கு போராடுவதை அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துத்தேரிபாளையத்தை சேர்ந்த பேச்சியம்மாள் துணிச்சலாக ஓடி வந்து வாய்க்கால் கரை ஓரமாக நின்றுகொண்டு தனது சேலைத்தலைப்பை வாய்க்காலில் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவிகளை நோக்கி வீசி பிடிக்கச்செய்து பின்னர் மூன்று பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்ட ஜே.சி.பி டிரைவர் சொக்கப்பன், பச்சையப்பன் மற்றும் விவசாயியான ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஓடி வந்து மூவரையும் கரை சேர்க்க உதவினர். ஆனால் மாணவி சகுந்தலா மட்டும் கண் முன்னே நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
இதனை அடுத்து காமநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறை அதிகாரி சுரேஸ்குமார் தலைமையில் வீரர்கள் சகுந்தலாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மூன்றாவது நாளாக மாணவியின் உடல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தேடுதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகம், காங்கேயம் தீயணைப்புத்துறை அதிகாரி சுப்பிரமணி, வெள்ளகோயில் தீய்ணைப்புத்துறை அதிகாரி தனசேகரன் மற்றும் பல்லடம் தீயணைப்புத்துறை அதிகாரி சுரேஸ்குமார் ஆகியோர் தலைமையில் மாணவி சகுந்தலாவின் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் வலையபாளையம் பகுயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மற்ற மூன்று மாணவிகளை துணிச்சலாக மீட்ட பெண் பச்சையம்மாள் தன் கண் முன்னே நீரில் அடித்துச்செல்லப்பட்ட சகுந்தலாவை மீட்கமுடியாத சோகத்தில் உள்ளார்.