கொள்ளை போகும் கனிம வளங்கள்.. பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?
தமிழகத்தில் கனிமவள கொள்ளை என்பது அரசியல் கடந்து பெருமளவில் கூட்டு களவாணிகளாக ஒன்று சேர்ந்து கனிமவள கொள்ளை நடத்தி வருகின்ற தகவல்கள் கனிமவள கும்பல்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு 60% எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களுக்கு 40% என்ற ஒப்பந்தத்தின் பேரில் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் கூட கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு சட்ட விரோதமாக கனிம வள கொள்ளை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று சட்ட விரோதமாக கனிம வள கும்பலுடன் கைகோர்த்து செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. அதேபோல அனுமதி இல்லாமல் பல்வேறு கல்குவாரிகள் செயல்படவும் அதிகாரிகள் துணை போய் வருகின்றதாகவும் கூறப்படுகிறது. அதேபோல அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகின்ற அந்த கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. ஒரே பதிவு எண் கொண்ட பல வாகனங்கள் சட்டவிரோதமாக கனிமவள கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவைகளை அதிகாரிகள் கண்டு கொள்வதுமில்லை சோதனை செய்வதும் இல்லை. அந்த கனிம வள லாரிகள் போலி அனுமதிச்சீட்டுடன் சோதனை சாவடிகளை கடந்து வருகிறது.
தற்போது கனிம வள கொள்ளைக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் தற்போது அதிரடியாக நடவடிக்கை எடுத்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 42 கல்குவாரிகளில் 12 கல்குவாரிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டு சுமார் 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு கல்குவாரியில் மட்டும் சுமார் 24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது ஆளும் திமுக கட்சி எம்எல்ஏயின் கல்குவாரி என்ற தகவல் வெளியாகி நம்மை பிரமிக்க வைத்து உள்ளது. ஆனால் இந்த அவராத தொகை வசூல் செய்யப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி தான். ஏனெனில் கடந்த 2013 ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் 28 கல்குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் அந்த கல்குவாரிகளை மூடி சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் 32 கோடி அபராதம் விதித்தார். ஆனால் இன்று வரை அந்த அபராத தொகை வசூல் செய்யப்படவில்லை என்பதே மிகப்பெரிய அவலமான உண்மையாக உள்ளது. தற்போது நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட ஆட்சியரை போல் ஓரளவாவது நேர்மையான அதிகாரிகள் ஏனைய தமிழகத்தின் மாவட்டங்களில் இதே போன்ற நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்திருந்தால் நேர்மையான ஆய்வுகள் நடத்தி இருந்தால் பல நூறு கோடி ரூபாய்கள் அபராதமாக பெறப்பட்டு இருக்க முடியும். ஆனால் கனிம வள கொள்ளைக்கு உடந்தையாகவே பல அதிகாரிகளும் செயல்பட்டு வருவதால் ஏனைய மாவட்டங்களில் ஆய்வுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
கனிம வள கொள்ளையை தடுக்க ஒரே வழி அதுவும் மகத்தான வழி அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டி தரும் ஒரே வழி ஒவ்வொரு கல்குவாரிகளிலும் கல் குவாரிக்கு அனுமதி கொடுக்கும் போதே எடை மேடையுடன் கூடிய திகிஷிஜிகிநி அமைக்கவும் அந்தக் கல்குவாரிக்கு வேறு எந்த வழியிலும் செல்ல முடியாத அளவில் இருப்பதுடன் அரசு கட்டுப்பாட்டுடன் நேரடியாக அதன் இணைப்புகள் அரசிடம் இருந்தால் ஒவ்வொரு வாகனமும் கல்குவாரிக்கு உள்ளே செல்லும்போதும் திரும்பி வரும்போதும் எடை மேடையுடன் கூடிய திகிஷிஜிகிநி வழியே செல்வதால் எவ்வளவு எடையில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும். அதற்கான தொகை அரசுக்கு ஆன்லைனில் வந்து சேரும். மேலும் ஒரே பதிவு எண் கொண்ட பல வாகனங்கள் இயக்க வாய்ப்பு இருக்காது. தில்லுமுல்லுகள் செய்வது தடுக்கப்படும். அரசுக்கு உடனடியாக அரசு கருவூலத்தில் கனிம வளத்துக்கான தொகை நேரடியாக ஆன்லைன் மூலம் வரவு வைக்கப்படும். இதை செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் கனிம வள கொள்ளை என்பது பெரும் அளவில் தடுக்கப்படும்.
கோடிகள் புரளும் கல்குவாரிகளில் இதுபோல எடை மேடையுடன் கூடிய திகிஷிஜிகிநி அமைப்பது பெரிய செலவுகள் ஏதும் அவர்களுக்கு கிடையாது. கல்குவாரிகள் தொடங்கும் போது அவர்கள் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதியுடன் தொடங்குவதற்கு மட்டுமே அனுமதி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எடை மேடையுடன் கூடிய திகிஷிஜிகிநி வழியே செல்லும் கனிமவள வாகனங்கள் அந்த இடத்தை கடந்த உடன் அதற்கான எடை அளவு மற்றும் அனுமதி விவரங்கள் கல் குவாரிக்கு எப்போது முதல் எப்போது வரை கல்குவாரி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்க ஒவ்வொரு நாளும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது அல்லது அதன் கால அளவு குறித்த அனைத்து தகவல்களுடன் கூடிய தகவல்கள் அனைத்தும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக இணைப்பதுடன் சோதனை சாவடிகளிலும் அந்த வாகனங்களின் விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவாகி இருக்க வேண்டும். அப்படி பதிவாகி இருந்தால் மட்டுமே அந்த வாகனங்களுக்கு கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த வாகனங்கள் எல்லை பகுதியை கடக்க அனுமதிக்கலாம்.
மேலும் எந்த இடம் வரை அந்த வாகனங்கள் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியை கடந்து சென்றால் அந்த வாகனங்களில் இணைக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய தகவல்கள் அதிகாரிகளுக்கு சென்றடையும் விதத்தில் அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்பட்டு இருப்பதை கட்டாயம் ஆக்கினால் மட்டுமே கனிம வள கடத்தலையும் கனிம வள கொள்ளையையும் ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போதைய ஆளுங்கட்சியானாலும் சரி எதிர்க்கட்சிகளும் இது போன்ற திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் இது போன்ற கட்டுப்பாட்டுகளுடன் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மட்டும் கல்குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து அந்த கல் குவாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு இயங்கினாலே தமிழகத்தின் தேவைக்கு தாராளமாக கனிம வளங்கள் கிடைக்கும். குறிப்பாக கனிமவள கொள்ளையை பெரும் அளவு தடுக்கவும் முடியும்.
இவ்வாறான கட்டுப்பாடுகளோடு கல்குவாரிகள் அமைக்கப்பட்டால் அரசுக்கு டாஸ்மாக்கை விட அதிக வருமானம் கிடைக்கும். இது போன்ற கட்டுப்பாடுகளுடன் கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் கனிமவளக் கொள்ளையை தடுக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.