கோயம்பேடு மார்க்கெட் பூட்டை உடைத்த தொழிலாளர்கள்
கொரோனா பரவலைத் தடுக்க, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் அனைத்து வாயில்களும் இழுத்துப் பூட்டப்பட்ட நிலையில், கதவை உடைத்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே புகுந்து குடியிருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு காரணியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கோயம்பேடுமார்க்கெட்டில் இருந்து அனைவரையும் வெளியேற்றி,அனைத்து ‘கேட்’களையும் மாநகராட்சிஅதிகாரிகள் இழுத்துப் பூட்டினர். அங்கிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலைமாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்தஊர்களுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனைசெய்யப்பட்டு, கொரோனா தொற்று உறுதியானவர்கள்சிகிச்சைக்காக அந்தந்த மாவட்ட தலைமைமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள், தங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகளை திருமழிசை மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றிச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், 4-வது கேட்டை உடைத்து கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்து குடித்தனம் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மார்க்கெட்டுக்குள் செல்லும் தொழிலாளர்கள் எவரும் கொரோனா குறித்த எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை எச்சரித்தாலும் எவரும் கேட்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
உள்ளே சென்று விட்டு சகஜமாக வெளியில் வரும் இத்தகைய நபர்களிடம் இருந்து மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் அச்சம் இருப்பதால், அவர்களை மீட்டு சமூக இடைவெளியுடன் சமுதாய நலக் கூடங்களில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
உணவுக்கு வழியில்லாமல் ஊருக்குப் போய் என்ன செய்வது என்ற குழப்பத்தில், திருமழிசை மார்க்கெட்டில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வேலைபார்த்து விட்டு, மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் வந்து தங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெளியேறாமல் குடியிருக்கும் தொழிலாளர்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் விழிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!