பெகாசஸ் உளவு விவகாரம் : மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா?
உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களின் செல்போன் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் சகிந்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ஊடக நிறுவனமான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகைகள் இணைந்து இந்த தகவலை புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம் என்றும் என்எஸ்ஓ விளக்கமளித்துள்ளது.
‘தி வயர்’ இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, ‘இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி, பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் என, பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போலவே பல்வேறு பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெகசாஸ் உளவு விவகாரம் குறித்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு, ஓர் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பெரும் குற்றச்சாட்டுகளை கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு வெளியானது, தற்செயலானது அல்ல.
குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது. இதில் துளியும் உண்மையும் இல்லை. பெகாசஸ் உளவு மென் பொருள் பயன்படுத்தி இதனை செய்வதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட பிரபலங்களின் அடுத்த பட்டியல் வெளியிட்டது. அதில், யாரையும் உளவு பார்க்கவில்லை என, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெயரும் இருந்தது.
உளவு பார்க்கவில்லை எனக் கூறிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் மொபைல் போனையே பெகாசஸ் மென் பொருள் உளவு பார்த்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் இரண்டு பேரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “செல்போன்கள் ஒட்டு கேட்பு விவகாரத்தில் இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும். ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் நல்லது இல்லாவிடில் வாட்டர்கேட் ஊழல் போல் பாஜவுக்கு அது தலைவலிதான்” என்று பதிவிட்டுள்ளார்.
- முகமது ஆரீப்