கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது எனவும் உலையில் சில தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது என இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் கமலேஷ் நில்கந்த் வியாஸ் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுவுலையானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பலத்த பொதுமக்கள் எதிர்ப்பை சந்தித்தது. இடிந்தகரையில் உள்ள பொது மக்கள் பல மாதங்களாக அணுவுலை அப்பகுதியில் அமைக்கப்படுவதற்கு எதிராக போராடி வந்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் அணுவுலையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி வழக்கு தொடுத்திருந்தனர். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு கூடங்குளம் அணுவுலை அலகு ஒன்று மின்னுற்பத்தியைத் தொடங்கியது. போராடும் மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகக் கூறி மத்திய அரசும் மாநில அரசுகளும் போராட்டத்தை ஒடுக்கின.
அதன் பின்னர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினால் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கூடங்குளம் அணுவுலை அலகு 1, 2013ஆம் ஆண்டிலிருந்து 2019 ஜனவரி வரைக்கும் 47 முறையும், அலகு 2, 2017ஆம் ஆண்டிலிருந்து 19 முறையும் பழுதாகி மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது.
கடந்த 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ரஷ்யாவின் சோச்சி நகரில் சர்வதேச அணுசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்திய அரசின் சார்பில் இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் கம்லேஷ் நில்கந்த் வியாஸ் கலந்து கொண்டார். அவர் பேட்டியில் கூடங்குளம் அணுவுலையில் சில பிரச்னைகள் இருப்பதை ஒப்புக் கொண்டார். அவர் பேசுகையில் “கூடங்குளம் அணுவுலைகள் அடிக்கடி நிறுத்தப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அந்த உலையில் தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது. அதை சரிசெய்ய அணுசக்திக் கழக அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்” எனக் கூறினார். இந்திய அரசைச் சேர்ந்த அதிலும் அணுசக்தித் துறையின் செயலாளர் மற்றும் இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் ஒருவரே இப்படி கூறியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து பேசிய அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ”சர்வதேச அளவில் அணுவுலை செயல்பாடுகளை ஒப்பிடுகையில் கூடங்குளம் அணுவுலை இத்தனை முறை நிறுத்தப்பட்டிருப்பது அசாதாரணமானது மட்டுமின்றி ஆபத்தானதும்கூட. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் இதைச் சொல்லித்தான் போராடி வந்தோம். ஆனால், எங்கள் குரலைக் கேட்காமல் நாங்கள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றும் காசு வாங்கிக்கொண்டு போராடுகிறோம் என்றும் இதிய அரசு கொச்சைப்படுத்தியது. அணுசக்தித் தலைவரின் கூற்றை இடிந்தகரை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்: எனக் கூறினார்.
இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் அளித்த பேட்டி குறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் ”நல்ல நிலையில் செயல்பட்டு வரும் ஒரு உலையானது இரண்டாண்டிற்கு ஒருமுறைதான் நிறுத்தப்படும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கைகா அணுவுலைதான் தொடர்ச்சியாக 962 நாட்கள் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளது. அப்படியிருக்கையில் கூடங்குளம் அடிக்கடி பழுதாவது என்றால் உலையில் பிரச்னை உள்ளது என்றுதான் அர்த்தம். அணுசக்திக் கழகத் தலைவரின் பேச்சு எங்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. உடனடியாக கூடங்குளத்தில் நடத்தப்பட்டு வரும் அணுவுலை விரிவாக்கப் பணிகளை நிறுத்த வேண்டும். சுதந்திரமான ஒரு குழுவைக் கொண்டு கூடங்குளம் அணுவுலையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை உலையில் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும். உறுதியான நடவடிக்கையை எடுப்பதற்கு மாநில அரசை அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் ரஷ்யாவில் நடந்த அணுசக்தி மாநாட்டில் பேசிய இந்திய அணுசக்தித் தலைவர் கம்லேஷ் நில்கந்த் வியாஸ் இந்தியா முழுவதும் புதிதாக 12 அணுவுலைகள் துவங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் எனவும் கூறினார்.