கிரண்பேடி விடுவிப்பு… தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் பெரும்பாலும் சமமான அதிகாரம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
முதலமைச்சரை நியமித்து அவர்களது ஆலோசனைப்படி அமைச்சர்களை நியமிப்பது, மாநில தேர்தல் ஆணையர்கள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிப்பதோடு, பல்கலைக்கழக வேந்தர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர். தேவைப்படும்போது மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபையை கலைப்பதோடு, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதபோது அவசர சட்டத்தையும் பிரகடனம் செய்யலாம்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்யலாம். அவர்களின் அனுமதிக்கு பிறகே எந்தவொரு மசோதாவும் சட்டமாகும். சட்ட மசோதாவை நிறுத்தி வைத்து அவர்கள் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கலாம். ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால் அரசு நிர்வாகத்தை கையாள்வது, மாநில குற்றவாளிகளின் தண்டனையை ஒத்திவைப்பது மற்றும் குறைப்பதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளனர்.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது தனது விருப்பத்தின் பேரில், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்து பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் வழங்கலாம். ஆனால், அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்ற விதி எல்லா ஆளுநரின் அதிகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.
அதேசமயம், டெல்லி துணை நிலை ஆளுநரின் அதிகாரம் மட்டும் மாறுபட்டுள்ளது. அங்கு நிலம், காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் மத்திய அரசின் பிரதிநிதியாக, அத்துறைகளின் மீது தனது அதிகாரத்தை செலுத்த முடியும் என்பதால், டெல்லி துணை நிலை ஆளுநர் கூடுதல் அதிகாரம் படைத்தவராக செயல்படுகிறார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டார். தொடக்கம் முதலே புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த அவர், கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி உள்ளதால் ஆட்சிக்கு சிக்கல் வலுத்து வருகிறது. 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், காங்கிரசுக்கு 14 உறுப்பினர்கள், 3 தி.மு.க.வினர், சுயேட்சை ஒருவர் ஆதரவு என கூட்டணியின் பலம் 18 ஆக இருந்தது.
நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் ,ஜான்குமார் என காங்கிரசில் 4 பேர் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியின் பலம் 10 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு பதிலளித்த நாராயணசாமி, காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். புதிய ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்திரராஜன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். சட்டசபையில் நாராயணசாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபிக்காததால் புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து பாஜக ஆளுநர்களை வைத்து ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் கடைசியாக பாண்டிச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
– நமது நிருபர்