இயற்கை சுற்றுலா… : அக்கறை காட்டாத தமிழகம்
சூழலியல் சுற்றுலா (Eco tourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.
இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல், கலாசாரங்களைப் பாதுகாத்தல் போன்றவையும் பாதுகாக்கப்படுகின்றன.
கேரளா போன்ற மாநிலங்களில் சூழலியல் சுற்றுலா ஊக்கப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருவதற்கிடையே, தமிழ்நாட்டில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறை போதிய விழிப்புணர்வுகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்த நிலையில், நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்த ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? கடந்த மூன்றாண்டுகளில் சூழலியல் சுற்றுலாவை ஊக்குவிக்க ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு இதற்காக வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு? அடுத்த 10 ஆண்டுகளில் சூழலியல் சுற்றுலாவுக்கான இலக்கு, அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் ஈட்டு என்பன உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பி. வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம், “தமிழ்நாடு உட்பட நாட்டின் மேம்பாட்டுக்காக சுற்றுலா அமைச்சகத்தால் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக சூழலியல் சுற்றுலா அடையாளம் காணப்பட்டுள்ளது. சூழலில் சுற்றுலா உட்பட சுற்றுலாவை மேம்படுத்தும் முதன்மை பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது. இருப்பினும், சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் நிதி உதவியை ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளது.
சூழலியல் சுற்றுலா வளர்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து திட்ட முன்மொழிவு எதுவும் ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தினால் பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ள சுற்றுலா அமைச்சகம், “சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த முறையில் சுற்றுலாவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை பராமரிப்பதில் சுற்றுலா அமைச்சகம் அழுத்தம் கொடுத்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டில் சூழலியல் சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியங்களை உணர்ந்து, சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் 15 கருப்பொருள் சுற்றுகளில் ஒன்றாக Eco Circuit சுற்றுலா அமைச்சகத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
– நமது நிருபர்