அரசியல்வாதி பொய் சொல்லலாம்.. ஆபாசம் தடையில்லை… : பேஸ்புக்
போலி செய்திகளைக் கண்டுபிடிக்க பேஸ்புக் எடுத்துள்ள முயற்சியில், அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, பேஸ்புக் கூறியுள்ளது. அரசியல்வாதிகள் கூறும் கருத்துக்களைச் செய்திகளாகப் பார்க்கப்படுவதாலே, இந்த முறை என பேஸ்புக் இதற்கான நியாயத்தை கூறுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேஸ்புக் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு துணைத் தலைவர் நிக் கிளக் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “அரசியல்வாதிகள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை. அதைச் செய்தியாகக் கருதுவோம்” என்றார்.
அதேபோல் நிர்வாண காட்சிகள், வன்முறை காட்சிகள் அல்லது அது சம்பந்தமான பதிவுகளாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு அது செய்திகளாக பேஸ்புக் நிறுவனத்தால் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டப் பதிவை நீக்கப்போவதில்லை என இந்த நிறுவனத்தின் கொள்கைகள் முன்பே மாற்றப்பட்டிருந்தது.
இதை ஏன் பேஸ்புக் நியாயப்படுத்திக் கொள்கிறது என்பது குறித்து நிக் கிளக் மேலும் கூறுகையில், “அரசியல்வாதிகள் குறித்து எங்கள் முடிவு தவறாக இருக்கலாம், எனினும் இதைச் சற்று பின்னால் இருந்து சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் நடுவராக இருந்துகொண்டு ஒரு சமூகத்தினரோ அல்லது அரசியல்வாதிகள் சொல்லும் கருத்துக்களையோ சரி தவறு என நிர்ணயம் செய்தால், அது சரியாக இருக்குமா? எங்களுக்கு அது சரி எனப் படவில்லை” என்றார்.
கடந்த ஜூன் மாதம் ட்விட்டர் அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் கண்காணிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளின் கருத்துக்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் அரசியல்வாதி எனக் கணக்கை வைத்திருப்பவர்கள் மீது, அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும் குழு பெரியதொரு சோதனைகள் செய்வதில்லை. அரசியல்வாதிகள் தொடர்பான விளம்பரங்களின் உண்மைத்தன்மையையும் கண்டறிவதில்லை. பேஸ்புக் இதுவரை யாரெல்லாம் அரசியல்வாதிகள் என அறியப்படுவார்கள் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், பேஸ்புக்கில்தான் அரசியல் தலைவர்களின் பெரும்பாலான பிரச்சாரங்கள் நடைபெற்றுள்ளது. இப்போது தமிழகத்திலும், கடந்த சட்டசபைத் தேர்தலில் ஓரளவு விளம்பரங்களைப் பிரதான கட்சிகள் வெளியிட்டன. இப்போது இந்த முறையால், நமது நாட்டில் அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும், தயக்கமின்றி சொல்லிச் செல்லலாம் என்ற நிலை ஏற்படுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.